ADDED : மார் 07, 2025 11:36 PM
ஷாஜகான்பூர்: உத்தர பிரதேச மாநிலம், ஷாஜகான்பூர் மாவட்டம், கணபத்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத் குமார், 25. குடிபோதைக்கு அடிமையான இவர், மனைவி மற்றும் குடும்பத்தினருடன் அடிக்கடி சண்டையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று காலை வழக்கம் போல் குடித்துவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். இதனால் வினோத் குமாரின் தந்தை அவரை கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த அவர், வீட்டு தோட்டத்தில் இருந்த ஈட்டியை எடுத்து வந்து தந்தையை குத்த பாய்ந்துள்ளார்.
இதை பார்த்த அவரது தாய் நைனா தேவி, 60, தடுப்பதற்காக குறுக்கே வந்தார். இதனால், ஈட்டி பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். நைனா தேவியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், ஈட்டியுடன் தப்பி ஓடிய வினோத்தை பிடிக்க முயன்றனர்.
அவர் துரத்தி வருபவர்களையும் தாக்கினார். அதன்பின் அவரை மடக்கி பிடித்த ஊர் மக்கள் போலீசிடம் ஒப்படைத்தனர்.