வெறுப்பை விதைப்பதா? காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்குதல்
வெறுப்பை விதைப்பதா? காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்குதல்
ADDED : செப் 15, 2024 12:14 AM

ஜம்மு: ''காங்கிரஸ் கட்சியினர், தங்களின் அன்பின் கடை வாயிலாக வெறுப்பை விற்கின்றனர். ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதம் தன் இறுதி மூச்சை சுவாசித்து வருகிறது. ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீண்டும் அளிப்பதில் சரியான நேரத்தில் தகுந்த முடிவு எடுக்கப்படும்,'' என, பிரதமர் மோடி பேசினார்.
ஜம்மு - காஷ்மீர் சட்டசபைக்கு தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட தேர்தல் நடக்கும் ஜம்முவின் தோடா மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து நேற்று பிரசாரம் செய்தார்.
அங்குள்ள விளையாட்டு மைதானத்தில் பொதுமக்கள் மத்தியில் பேசிய பிரதமர், காஷ்மீரி மொழியில் அவர்களை வரவேற்றார்.
அவர் பேசியதாவது:
நம் நாடு சுதந்திரம் அடைந்த பின், ஜம்மு - காஷ்மீரை வெளிநாட்டு சக்திகளே பெரும்பாலும் மறைமுகமாக ஆட்சி செய்து வந்தன.
வாரிசுகள்
அதுமட்டுமின்றி, வாரிசு அரசியல், இந்த அழகான பகுதியை வெறுமையாக்கியுள்ளது. நீங்கள் நம்பிய அரசியல் கட்சிகள், உங்கள் வாரிசுகளை பற்றி கவலைப்படாமல், தங்கள் வாரிசுகளை மட்டுமே கவனித்து வந்தன.
அவர்களை மட்டுமே முன்னிறுத்தின. புதிய தலைமையை அவர்கள் வளரவிடவில்லை.
கடந்த 2014ல், மத்தியில் ஆட்சிக்கு வந்தது முதல், இளம் தலைமுறையை கொண்டு புதிய தலைமையை நாங்கள் நாடு முழுதும் உருவாக்கி வருகிறோம்.
இங்குள்ள இளைஞர்கள் பயங்கரவாதத்தின் தாக்கத்தை எதிர்கொண்டனர். மக்களை தவறாக வழிநடத்தியதன் வாயிலாக, குடும்ப வாரிசுகளின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்த கட்சிகள், அதிகாரத்தை மட்டும் அனுபவித்து இளம் தலைவர்களை வேரூன்ற விடவில்லை.
காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை இளைஞர்கள் அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை.
ஆனால், 2018க்குப் பின், பா.ஜ.,வின் முயற்சியால் நடந்த உள்ளாட்சி தேர்தல்கள் வாயிலாக 35,000 இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நடவடிக்கை
தற்போது நடக்கும் சட்டசபை தேர்தல் மூன்று குடும்பங்களுக்கும், இளைஞர்களுக்கும் இடையிலான தேர்தல். ஒரு பக்கம் மூன்று குடும்பங்கள்; மறுபுறம் எதிர்கால கனவுகளை சுமந்து காத்திருக்கும் என் மகள்கள் மற்றும் சகோதரிகள்.
மத்தியில் பா.ஜ., தலைமையிலான கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில், ஜம்மு - காஷ்மீர் ஏராளமான வளர்ச்சியையும், மாற்றங்களையும் சந்தித்துள்ளது.
போலீஸ் மற்றும் ராணுவத்தின் மீது எறியப்பட்ட கற்கள், புதிய ஜம்மு - காஷ்மீரை கட்ட பயன்படுத்தப்படுகின்றன.
இங்கு, பயங்கரவாதத்தை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக, இங்கு பயங்கரவாதம் தன் இறுதி மூச்சை சுவாசித்து வருகிறது.
ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீண்டும் அளிப்பதில் சரியான நேரத்தில் தகுந்த முடிவு எடுக்கப்படும்.
பா.ஜ., வெறுப்பின் கடைகளை நடத்துவதாகவும், ஆனால் தாங்கள் அன்பின் கிடங்கை திறந்து விட்டுள்ளதாகவும் காங்கிரசின் ராகுல் முன்பு கூறினார்.
சமீபத்தில் அவர், அமெரிக்காவில் பங்கேற்ற நிகழ்ச்சியில், அவருக்கு எதிரான கேள்வியைக் கேட்டதால், இந்திய பத்திரிகையாளர் ஒருவர், ராகுலின் உதவியாளர்களால் தாக்கப்பட்டுள்ளார்.
தங்களுடைய அன்பின் கடையின் வாயிலாக அவர்கள் வெறுப்பையே விற்கின்றனர்.
லோக்சபா தேர்தலில், தான் வென்றதைவிட, 20 எம்.பி.,க்கள் குறைவாக கிடைத்திருந்தால், பா.ஜ.,வின் தலைவர்கள் பலரும் சிறையில் அடைக்கப்பட்டிருப்பர் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். இதுதான், அன்பின் கடையா?
நாங்கள் மக்களுக்கு வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்று அரசை நடத்துகிறோம். ஆனால், மற்றவர்களை சிறைக்கு அனுப்புவதற்காக தங்களுக்கு ஆட்சி தேவை என்று காங்கிரஸ் விரும்புகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.