ரேணுகாசாமி கொலை வழக்கு விசாரணைக்கு சிறப்பு கோர்ட்?
ரேணுகாசாமி கொலை வழக்கு விசாரணைக்கு சிறப்பு கோர்ட்?
ADDED : ஆக 08, 2024 05:58 AM

பெங்களூரு: ரேணுகாசாமி கொலை வழக்கை விரைந்து முடிக்கும் நோக்கில், விரைவு அல்லது சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று, கர்நாடக அரசிடம், போலீசார் முறையிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி, 33 என்பவரை கொலை செய்த வழக்கில், நடிகர் தர்ஷன், அவரது தோழி பவித்ரா உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரேணுகாசாமி கொலை செய்யப்பட்டு, இன்றுடன் இரண்டு மாதங்கள் ஆகும் நிலையில், வழக்கு தொடர்பான சாட்சியங்களை வலுப்படுத்தும் பணியில், போலீசார் தீவிரமாக ஈடுபடுகின்றனர்.
கைதான 17 பேருக்கும் மரபணு பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களின் முடி, ரத்தம் மாதிரி, கொலை நடந்த அன்று அணிந்திருந்த உடைகள், காலணிகள் சேகரிக்கப்பட்டு பெங்களூரு மற்றும் ஹைதராபாதில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.
தர்ஷன் அணிந்திருந்த டி - ஷர்ட், ஜீன்ஸ் பேன்ட் பெங்களூரு ஆய்வகத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது டி - ஷர்ட்டில் ரத்த கறை படிந்து இருந்தது கண்டறியப்பட்டது.
ரத்தம் யாருடையது என்று ஆய்வு செய்த போது, ரேணுகாசாமியின் ரத்தம் என்பது உறுதியாகி உள்ளது.
இதுதொடர்பான அறிக்கை போலீசார், கைக்கு கிடைத்து உள்ளது. இதனால் தர்ஷனுக்கு சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. கொலை வழக்கில் மேலும் சில அறிக்கைகள் வர வேண்டி உள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் அனைத்து அறிக்கைகளும், போலீசார் கைக்கு கிடைத்து விடும். அடுத்த மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த வழக்கை விரைந்து முடிக்கும் நோக்கில், விரைவு அல்லது சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என்று, கர்நாடக அரசிடம், போலீசார் முறையிட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் தர்ஷன் மீதான போலீசாரின் பிடி இறுகி உள்ளது.