ADDED : ஜூலை 29, 2024 04:44 AM

ராபர்ட்சன்பேட்டை எம்.ஜி.மார்க்கெட், அரிசி கடைகள் அருகே, சுமை துாக்கும் தொழிலாளர் கள் சிலர், அரச மரம் அருகே செங்கலை வைத்து, அம்மனாக வழிபட்டு வந்தனர். அவர்களின் வாழ்வில், அம்மன் அருள் கிடைத்ததாக பரவசம் கொண்டனர். வாழ்வளிக்கும் தெய்வமாக, சர்ப்பமாக பலருக்கு அம்மன் காட்சி அளித்துள்ளார்.
தெய்வ பக்தி மிகுந்த கோவிந்தராஜ் என்பவர், அம்மனுக்கு கோவில் கட்டும் பணியை ஆரம்பித்தார். எம்.ஜி.மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள் அனைவருமே, திருப்பணிக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.
ஸ்ரீ தேவி கருமாரி அம்மனை பிரதிஷ்டை செய்து, கும்பாபிஷேகமும் நடத்தினர். தங்கவயலில் உள்ள அம்மன் பக்தர்கள் திரண்டனர்; அம்மன் அருளைப் பெற்றனர்.
ஆண்டு தோறும் தேவி கருமாரி அம்மனுக்கு 1,008 பால் குடம் எடுக்கும் திருப்பணியை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இவ்வாண்டு 30ம் ஆண்டு விழாவாக ஆடித் திருவிழாவை கொண்டாடினர். பாலாபிஷேகம், வெள்ளி கவசத்துடன் சிறப்பு அலங்காரம், தீப விளக்கு ஏற்றி சுமங்கலி பூஜை நடத்தினர்.
தினமும் காலை 7:00 முதல் 10:00 மணி வரையிலும், மாலையில் 5:00 மணி முதல் 9:00 மணி வரையிலும்; வெள்ளிக்கிழமைகளில் காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரையிலும், மாலையில் 4:00 மணி முதல் 9:00 மணி வரையிலும் பூஜைகள் நடக்கிறது.
அமாவாசை, பவுர்ணமி, கிருத்திகை, சங்கடஹர சதுர்த்தி, நவராத்திரியில் 9 நாட்களும் அம்மன் சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடக்கின்றன.

