வேண்டிய வரத்தை அள்ளி கொடுக்கும் ஸ்ரீகிரி மஹாலட்சுமி சத்யநாதா சுவாமி
வேண்டிய வரத்தை அள்ளி கொடுக்கும் ஸ்ரீகிரி மஹாலட்சுமி சத்யநாதா சுவாமி
ADDED : செப் 17, 2024 04:14 AM

நம்மில் பலருக்கும் பணம் தான் பிரச்னையாக உள்ளது. ஆடம்பர செலவு, பேராசையால் பணம் இழந்தவர்கள் ஏராளம். ஏழைகளுக்கு, தங்கள் கஷ்டத்தை தீர்க்க பணம் தரும்படி மஹாலட்சுமியை வேண்டுவர்.
அந்த வகையில் பக்தர்கள் வேண்டியதை அள்ளி கொடுக்கும், ஸ்ரீகிரி மஹாலட்சுமி சத்யநாதா கோவில், உடுப்பி மாவட்டம், குந்தாபுரா தாலுகா, நெரலகட்டே அடுத்த ஸ்ரீகிரியில் அமைந்துள்ளது.
இந்த கோவிலுக்கு வந்து சென்ற பக்தர்களுக்கு, செல்வத்துடன், கல்வி, உடல் ஆரோக்கியமும் பெற்று செழிப்பாக இருப்பதாக தெரிவிக்கின்றனர். ஒரு வேளை உணவுக்கு கூட கஷ்டப்பட்டு வந்தவர்கள், மஹாலட்சுமி சத்யநாதாவை தரிசனம் செய்த பின், பலருக்கு உதவும் வகையில் செழிப்புடன் இருப்பதாக கூறுகின்றனர்.
பக்தியுடன் மஹாலட்சுமியை வேண்டியவர்களின் ஆசை ஈடேறி உள்ளது. இதனால், பெரும்பாலான பக்தர்கள் எந்த ஒரு நல்ல காரியம் செய்வதற்கும், இங்கு வந்து மஹாலட்சுமியை தரிசனம் செய்த பின்னரே செய்கின்றனர்.
வெள்ளிக் கிழமைகளில் சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடக்கும். அதிகாலை முதல், இரவு வரை சிறப்பு பூஜைகள் நடக்கும். தொடர்ந்து, எட்டு வெள்ளிக் கிழமைகளில் வந்து பூஜை செய்தால், கஷ்டங்கள் நீங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
எலுமிச்சை பழத்தில் விளக்கு ஏற்றி வழிபடுதல், மஹாலட்சுமிக்கு சேலை, மாலை சமர்ப்பணம் செய்வது என பக்தர்கள் பல்வேறு காணிக்கை செலுத்துகின்றனர். அவ்வப்போது, சுமங்கலி பூஜை, திருவிளக்கு பூஜை நடக்கும்.
ஆண்டுதோறும் வரமஹாலட்சுமி விரதம் நாளன்று, சிறப்பு பூஜைகள் நடக்கும். அன்றைய தினம் பக்தர்களின் கூட்டம், கட்டுக்கடங்காமல் இருக்கும். கர்நாடகா மட்டுமின்றி, தமிழகம், கேரளா, ஆந்திரா, மஹாராஷ்டிரா உட்பட வெவ்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவர். நம்பிய பக்தர்களை கை விடாத கோவில் என்று அப்பகுதியினர் கூறுகின்றனர்.
கூடுதல் தகவலுக்கு, 97413 67817 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
- நமது நிருபர் -