ADDED : ஏப் 14, 2024 07:01 AM

மைசூரு: கடந்த எட்டு ஆண்டுகளாக நேருக்கு நேர் சந்திக்காமல் இருந்த சீனிவாச பிரசாத்தை, முதல்வர் சித்தராமையா சந்தித்துப் பேசினார்.
முதன் முறையாக சித்தராமையா முதல்வரானபோது, சீனிவாச பிரசாத் அமைச்சராக இருந்தார். பின், அவரிடம் இருந்து அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. இதனால் கட்சியை விட்டு வெளியேறிய அவர், பா.ஜ.,வில் இணைந்தார். 2019 லோக்சபா தேர்தலில் சாம்ராஜ்நகர் எம்.பி.,யானார்.
தற்போதைய லோக்சபா தேர்தலில், தனது மருமகன் தீரஜ் பிரசாத்துக்கு கட்சி மேலிடத்தில் சீட் கேட்டிருந்தார். ஆனால் பால்ராஜுக்கு சீட் வழங்கப்பட்டது.
ஏற்கனவே அறிவித்தபடி, அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். முதல்வர் சித்தராமையாவின் உத்தரவின்பேரில், சீனிவாச பிரசாத்தை, சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பா, யதீந்திரா, சுனில் போஸ் ஆகியோர் அண்மையில் சந்தித்து பேசினர்.
சீனிவாச பிரசாத் மருமகன் தீரஜ் பிரசாத், பா.ஜ.,வில் இருந்து விலகி சிவகுமார் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார்.
இந்நிலையில், மைசூரில் சீனிவாச பிரசாத்தை, எட்டு ஆண்டுகளுக்குப் பின் முதல்வர் சித்தராமையா நேற்று சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு அரைமணி நேரம் நடந்தது.
அப்போது காங்கிரசின் மைசூரு வேட்பாளர் லட்சுமண், சாம்ராஜ்நகர் வேட்பாளர் சுனில் போசுக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.
இதுதொடர்பாக முதல்வர் சித்தராமையா கூறியதாவது:
பிரசாத்தும், நானும் நீண்ட நாள் நண்பர்கள். அரசியல் ரீதியாக நான் காங்கிரசிலும், அவர் பா.ஜ.,விலும் இருக்கிறோம். தற்போது அரசியலில் இருந்து ஓய்வுபெற்றுள்ளார். அவரை சந்தித்து நலம் விசாரிக்க வந்தேன்.
அவர் எந்த கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை என்று கூறிவிட்டார். எனவே அவரிடம் ஆதரவு பெறுவதில் அர்த்தமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
சீனிவாச பிரசாத் கூறியதாவது:
மைசூரில் நாளை (இன்று) நடக்கும் பிரதமர் மோடியின் மாநாட்டுக்கு அழைப்பு வரவில்லை, வரப்போவதும் இல்லை. நான் போகவும் மாட்டேன். என்னிடம் சித்தராமையா எந்த அரசியல் விவாதமும் நடத்தவில்லை. சாதாரண சந்திப்பு தான். என் ஆதரவு கேட்டார். நான் அரசியலில் ஓய்வு பெற்றுள்ளேன். சாம்ராஜ் நகரில் காங்கிரசுக்கு நல்ல சூழல் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
எட்டு ஆண்டுகளுக்கு பின், சீனிவாச பிரசாத்தை அவரது இல்லத்தில் முதல்வர் சித்தராமையா சந்தித்து பேசினார். இடம்: மைசூரு.

