ADDED : மே 01, 2024 08:19 AM

மைசூரு : உடல்நலக்குறைவால் மரணம் அடைந்த, பா.ஜ., - எம்.பி., சீனிவாச பிரசாத் உடல், அரசு மரியாதையுடன் மைசூரில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.
சாம்ராஜ் நகர் தொகுதி பா.ஜ., - எம்.பி., சீனிவாச பிரசாத், 76. உடல்நலக் குறைவால் பெங்களூரில் தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார்.
அவரது உடல், சொந்த ஊரான மைசூருக்கு கொண்டு வரப்பட்டது. முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா உள்ளிட்ட தலைவர்கள் நேற்று முன்தினம் அஞ்சலி செலுத்தினர்.
அசோக்புரத்தில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த சீனிவாச பிரசாத் உடலுக்கு பொதுமக்கள் திரண்டு வந்து, அஞ்சலி செலுத்தினர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மைசூரு பா.ஜ., வேட்பாளர் யதுவீர் நேற்று அஞ்சலி செலுத்தினர்.
பின் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், சீனிவாச பிரசாத் உடல் அசோக்புரத்தில் உள்ள அம்பேத்கர் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. புத்த பிக்குகள் சிறப்பு பூஜைகள் செய்தனர். அதன்பின், அவரது உடல் மீது போர்த்தப்பட்டு இருந்த தேசியக் கொடியை குடும்பத்தினரிடம், கலெக்டர் ராஜேந்திரா ஒப்படைத்தார். இதையடுத்து 21 குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன் சீனிவாச பிரசாத் உடல் அடக்கம் செய்யப்பட்டது.