பிரஜ்வல் வழக்கில் ஒதுங்கி இருங்கள் பா.ஜ., தலைவர்களுக்கு மேலிடம் கட்டளை
பிரஜ்வல் வழக்கில் ஒதுங்கி இருங்கள் பா.ஜ., தலைவர்களுக்கு மேலிடம் கட்டளை
ADDED : மே 03, 2024 06:58 AM
பெங்களூரு: ஹாசன் ம.ஜ.த., - எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ விஷயத்தில், கருத்து கூறாமல் ஒதுங்கி இருக்கும்படி பா.ஜ., மேலிடம், மாநில தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் பா.ஜ., மற்றும் ம.ஜ.த., கூட்டணி வைத்துள்ளன. கோலார், மாண்டியா, ஹாசன் என, மூன்று தொகுதிகளை பா.ஜ., விட்டுக் கொடுத்தது. சில தொகுதிகளை தவிர, மற்ற தொகுதிகளில் இரு கட்சிகளின் தலைவர்களும் ஒற்றுமையுடன் பிரசாரம் செய்கின்றனர்.
மாண்டியாவில் கூட்டணி வேட்பாளர் குமாரசாமிக்கு ஆதரவாக, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா உட்பட பல தலைவர்கள் பிரசாரம் செய்தனர்.
இதேபோன்று குமாரசாமியும், பா.ஜ., போட்டியிடும் தொகுதிகளில் பிரசாரம் செய்தார். அனைத்தும் நல்லபடியாக நடந்த நிலையில், ஹாசன் ம.ஜ.த., - எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ வெளியாகி, பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இவரால் ம.ஜ.த.,வை விட, பா.ஜ., அதிக தர்ம சங்கடத்துக்கு ஆளாகியுள்ளது. காங்கிரசுக்கு புதிய அஸ்திரம் கிடைத்துள்ளது. முதல்வர், துணை முதல்வர் என, காங்கிரசின் பல தலைவர்கள், மோசமாக விமர்சிக்கின்றனர். பலாத்கார குற்றவாளிக்கு ஆதரவாக பா.ஜ.,வினர் இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.
ஆபாச வீடியோ வழக்கு பற்றி, வெளிநாடுகளிலும் சர்ச்சை நடக்கிறது. எனவே விவாதத்தில் சிக்காமல், கவனமாக நடந்து கொள்ளும்படி, மாநில தலைவர்களை பா.ஜ., மேலிடம் எச்சரித்துள்ளது. பென்டிரைவ் விஷயத்தில், ம.ஜ.த.,வுடன், பா.ஜ., மீதும் காங்கிரசார் பாய்கின்றனர்.
காங்கிரஸ் தேசிய ஊடக தலைவர் சுப்ரியா ஸ்ரீநாடேவும், 'பலாத்கார குற்றவாளிகளை, பிரதமர் மோடி காப்பாற்றுகிறார். இவர் பெண்களுக்கு பாதுகாப்பாக இல்லை' என குற்றம் சாட்டினார்.
இதை தீவிரமாக கருதிய பா.ஜ., பிரஜ்வல் வழக்கில் இருந்து ஒதுங்கி நிற்கிறது. 'ம.ஜ.த., தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கம் மட்டுமே. பிரஜ்வல் கூட்டணி வேட்பாளர். இவர் செய்த தவறுக்கு, நாங்கள் பொறுப்பல்ல' என, பா.ஜ., தலைவர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் 'மாநில தலைவர்கள், பிரஜ்வல் வழக்கு விசாரணை குறித்து பேசக்கூடாது. சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவிக்க வேண்டாம். இந்த விஷயத்தில் தலையிடாமல் ஒதுங்கி இருங்கள்' என, பா.ஜ., மேலிடம் கட்டளையிட்டுள்ளது.