ADDED : ஜூலை 25, 2024 11:03 PM

மாண்டியா: ரேஷன் கடையில் வழங்கும் அரிசியில் கல், மண் கலந்து இருப்பதாக கூறி, அதிகாரிகளை கண்டித்து பெண்கள் போராட்டம் நடத்தினர்.
கர்நாடகாவில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா 10 கிலோ இலவச ரேஷன் அரிசி வழங்கப்படும்' என்று, காங்கிரஸ் அறிவித்தது.
தரமில்லை
ஆனால் ஆட்சிக்கு வந்த பின், 'மத்திய அரசு அரிசி தரவில்லை' என்று கூறி, 5 கிலோ அரிசி தான் கொடுக்கின்றனர். மீதம் 5 கிலோ அரிசிக்கு பணம் தருவதாக கூறினர்.
ஆனால், பெரும்பாலானோருக்கு 5 கிலோ அரிசிக்கான பணம் கிடைக்கவில்லை. அரசு வழங்கும் 5 கிலோ அரிசி தரமாக இல்லை என்று பல இடங்களில் மக்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், மாண்டியாவின் நாகமங்களா தாலுகா, சுகதாரே கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில், கடந்த சில மாதங்களாக மண், கல் கலந்த ரேஷன் அரிசியை பொது மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
இது குறித்து உணவு வழங்கல் துறை அதிகாரிகளிடம், கிராம மக்கள் பலமுறை புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை.
அதிகாரிகள் உறுதி
இதனால் கோபமடைந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், நேற்று முன்தினம் ரேஷன் அரிசி மூட்டைகளை, சாலையில் வைத்து போராட்டம் நடத்தினர். அதிகாரிகளுக்கு எதிராக எதிராகவும் கோஷம் எழுப்பினர்.
இந்த போராட்டம் பற்றி அறிந்த மாவட்ட உணவுத் துறை இன்ஸ்பெக்டர்கள் பவித்ரா, ரேவண்ணா ஆகியோர் கிராமத்திற்கு சென்று, போராட்டம் நடத்திய பெண்களிடம் பேச்சு நடத்தினர். தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

