இந்திரா போலவே மம்தாவையும்...: முதல்வருக்கு எதிராக கருத்து: சேட்டை வாலிபர் கைது
இந்திரா போலவே மம்தாவையும்...: முதல்வருக்கு எதிராக கருத்து: சேட்டை வாலிபர் கைது
UPDATED : ஆக 19, 2024 12:35 PM
ADDED : ஆக 19, 2024 12:28 PM

கோல்கட்டா: மேற்குவங்க முதல்வர் மம்தாவுக்கு அச்சுறுத்தல் விடும் வகையில் சமூகவலைதளத்தில் பதிவிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் மருத்துவ கல்லூரியில் பெண் டாக்டர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஆளும் மம்தா பானர்ஜி அரசுக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நடவடிக்கை
சமூக வலைதளத்தில் அரசுக்கு எதிராக பல்வேறு பதிவுகள் தொடர்ந்து வெளியாகின்றன. இன்ஸ்டாகிராமில், 'இந்திராவை போல மம்தா பானர்ஜியையும்...' என வாலிபர் ஒருவர் பதிவிட்டுள்ளார். இந்திரா படுகொலையை நினைவூட்டி, அச்சுறுத்தல் விடும் வகையிலும், துாண்டும் வகையிலும் பதிவிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கைகள் வலுத்தன.
கைது
இந்நிலையில், முதல்வர் மம்தாவுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டதற்காக, இரண்டாம் ஆண்டு பிகாம் படிக்கும் மாணவர் ஒருவரை கோல்கட்டா போலீசார் கைது செய்தனர்.
போலீசார் விளக்கம்
போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஆர்ஜி கார் மருத்துவமனையில் சமீபத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட நபர் மூன்று பதிவுகளை வெளியிட்டுள்ளார். மாணவரை கைது செய்து விசாரிக்கிறோம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

