கேரளாவில் மாணவர்கள் மோதல் 'கோமா'வில் இருந்த மாணவர் பலி
கேரளாவில் மாணவர்கள் மோதல் 'கோமா'வில் இருந்த மாணவர் பலி
ADDED : மார் 02, 2025 03:24 AM
கோழிக்கோடு: கேரளாவில் டியூஷன் சென்டரில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலின்போது, படுகாயமடைந்து 'கோமா'வில் இருந்த 10ம் வகுப்பு மாணவர் நேற்று உயிரிழந்தார்.
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் முகமது ஷபாஸ், 15, என்ற மாணவர், 10ம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் தாமரச்சேரியில் உள்ள டியூஷன் சென்டரில் படித்து வந்தார். இங்கு, பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும் பயின்று வருகின்றனர். டியூஷன் சென்டரில் கடந்த 27ம் தேதி, பிரிவு உபசார விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியை நடத்துவது தொடர்பாக முகமது ஷபாஸ் மற்றும் அவரது நண்பர்களுக்கும், அதே பகுதியில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.
அப்போது முகமது ஷபாஸை, அரசு பள்ளியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் 'நன்சக்' எனப்படும் தற்காப்புக் கலைக்கு பயன்படுத்தப்படும் ஆயுதத்தால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், தலையில் படுகாயமடைந்த முகமது ஷபாஸ், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சிகிச்சையின் போதே கோமா நிலைக்கு சென்ற முகமது ஷபாசுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலை அவர் உயிரிழந்தார். இதையடுத்து, கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், தாக்குதல் நடத்திய ஐந்து மாணவர்களை கைது செய்து, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.