ADDED : ஏப் 08, 2024 05:04 AM
பெங்களூரு: பெங்களூரு மருத்துவ கல்லுாரியின் இரண்டு மாணவியருக்கு காலரா தொற்று உறுதியானதால், பீதியடைந்த மாணவியர், விடுதியை காலி செய்து வெளியேறுகின்றனர்.
பெங்களூரில் காலரா தொற்று பரவுகிறது. பெங்களூரு மருத்துவ கல்லுாரி மற்றும் ஆய்வகத்தில் படிக்கும் மாணவியர், விடுதியில் தங்கியுள்ளனர். சில நாட்களுக்கு முன், விடுதியில் தங்கியிருந்த 49 மாணவியருக்கு வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இவர்களில் இருவருக்கு, காலரா தொற்று இருப்பது உறுதியானது. இவர்கள் சிகிச்சை பெறுகின்றனர். திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால், மாணவியர் பீதியில் உள்ளனர். விடுதியில் தரமான உணவு மற்றும் துாய்மை இல்லாததே காரணமாக இருக்கலாம் என, மாணவியர் அஞ்சுகின்றனர்.
எனவே, மாணவியர் கல்லுாரி விடுதியை காலி செய்கின்றனர். தங்களின் லக்கேஜ்களுடன் வேறு விடுதிகளுக்கு மாறுகின்றனர். சிலர் தங்களின் உறவினர், நண்பர்கள் வீடுகளுக்கு சென்று தங்கியுள்ளனர்.
இதற்கிடையில் சுகாதாரத் துறை அதிகாரிகள், கல்லுாரி விடுதிக்கு வந்து, குடிநீரை பரிசோதித்தனர்.

