ADDED : பிப் 21, 2025 10:44 PM

பாலக்காடு; கேரள மாநிலம், பாலக்காட்டை மையமாக கொண்டு செயல்படும், பாடல்களை விரும்புவோரின் 'மெஹில்' அமைப்பு, 12ம் ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக, நேற்று முன்தினம் மாலை 'சூபி' இசை நிகழ்ச்சியை நடத்தியது.
பாலக்காடு ராப்பாடி கலையரங்கில், தேசிய மனிதநேய மன்றத்தின் ஒத்துழைப்புடன் நடந்த இந்த நிகழ்ச்சியில், புதுடில்லியை மையமாகக் கொண்டுள்ள 'ஷார் யார்' (நான்கு நண்பர்கள்) என்ற 'சூபி' சங்கீத குழுவின் இசைக் கச்சேரி நடந்தது.
மதன் கோபால் ஹார்மோனியம் வாசித்து 'சூபி' பாடல்கள் பாட, தீபக் (கிட்டார், பன்ஜோ), பீரதம் கோஷால் (சரோத்), அம்ஜத்கான் (தபலா) ஆகியோர் பின்னணி வாத்தியங்கள் வாசித்தனர்.
கோழிக்கோடு, பெரிந்தல்மண்ணை, சாவக்காடு ஆகிய இடங்களில் உள்ள இசை நிகழ்ச்சிகளுக்கு பின் 'ஷார் யார்' குழு, பாலக்காட்டில் இசை நிகழ்ச்சி நடத்துவது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியையொட்டி 'மெஹில்' அமைப்பு உறுப்பினர்களின் இசை நிகழ்ச்சியும் நடந்தது.