பயங்கரவாத எதிர்ப்பு குழு அமைக்க வேண்டும்; ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்
பயங்கரவாத எதிர்ப்பு குழு அமைக்க வேண்டும்; ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்
UPDATED : நவ 22, 2025 05:13 PM
ADDED : நவ 22, 2025 03:49 PM

ஜோகன்னஸ்பர்க்: உலகளாவிய மருத்துவ குழு, போதைப்பொருள், பயங்கரவாத எதிர்ப்பு குழுவை அமைத்து, இதற்கான சட்ட விரோத பணபரிமாற்றத்தை தடுக்க வேண்டும் என ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பேசுகையில் தெரிவித்தார்.
தென் ஆப்ரிக்காவிற்கு சென்றுள்ள பிரதமர் மோடி, இந்திய புலம்பெயர்ந்தோரின் உற்சாகமான கலாசார நிகழ்ச்சிகளைக் கண்டு களித்தார். கணபதி பிரார்த்தனை, சாந்தி மந்திரம் மற்றும் பிற தெய்வீக பிரார்த்தனைகளுடன் அவருக்கு இந்திய வம்சாவளியினர் வரவேற்பு அளித்தனர்.
ஜோகன்னஸ்பர்க் நகரத்தில் நடக்கும் ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். ஜி20 உச்சி மாநாட்டு நடக்கும் இடத்திற்கு வந்த பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் சிரில் ராமபோசா வரவேற்றார். உலகத் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் இந்தியா மற்றும் உலகின் வளரும் நாடுகளின் பிரச்னை குறித்து மோடி விவாதித்தார். ஜி20 மாநாட்டின் முதல் அமர்வில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது: ஆப்ரிக்கா முதல் முறையாக ஜி20 உச்சிமாநாட்டை நடத்துவதால், நிலையான வளர்ச்சியில் கவனம் செலுத்துவதற்கும் இதுவே சரியான தருணம். சுகாதார அவசரநிலைகள் மற்றும் இயற்கை பேரழிவுகளை எதிர்கொள்ளும்போது நாம் ஒன்றாகச் செயல்படும்போது நாம் வலுவாக இருக்கிறோம்.
எந்தவொரு அவசரநிலைகளின் போதும் விரைவான பயன்பாட்டிற்குத் தயாராக இருக்கும் சக ஜி20 நாடுகளிலிருந்து பயிற்சி பெற்ற மருத்துவ நிபுணர்களின் குழுக்களை உருவாக்குவதே நமது முயற்சியாக இருக்க வேண்டும்.
போதைப்பொருள் கடத்தலின் சவாலை, எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். உலகளாவிய மருத்துவ குழு, போதைப்பொருள், பயங்கரவாத எதிர்ப்பு குழுவை அமைத்து, இதற்கான சட்ட விரோத பணபரிமாற்றத்தை தடுக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
முதலில் 2022ம் ஆண்டு இந்தோனேஷியாவிலும், 2023 ம் ஆண்டு இந்தியாவிலும், 2024ம் ஆண்டு பிரேசிலிலும் ஜி20 உச்சி மாநாடு நடந்தது குறிப்பிடத்தக்கது.

