வான்கூவர்-டில்லி ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்கு திடீர் நெஞ்சுவலி: கோல்கட்டாவில் தரையிறக்கம்
வான்கூவர்-டில்லி ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்கு திடீர் நெஞ்சுவலி: கோல்கட்டாவில் தரையிறக்கம்
ADDED : நவ 22, 2025 04:00 PM

புதுடில்லி: வான்கூவரில் இருந்து டில்லி நோக்கி சென்று கொண்டிருந்த விமானத்தில் வந்த பயணி, நெஞ்சுவலியால் உயிரிழந்தார்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
கனடாவின் வான்கூவரில் இருந்து புதுடில்லிக்கு ஏர் இந்தியா விமானம் (AI 186) எப்போதும் போல் ஏராளமான பயணிகளுடன் புறப்பட்டது. நடுவானில் விமானம் பறந்து கொண்டு இருந்த போது, தல்பீர்சிங்(70) என்பவருக்கு திடீரென உடலில் அசௌகரியம் ஏற்பட்டது.
கடும் நெஞ்சுவலியால் அவர் துடிப்பதை கண்ட விமான சிப்பந்திகள், உடனடியாக விமானிகள் குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, விமானம் கோல்கட்டா நோக்கி திருப்பி விடப்பட்டது. அங்கு விமான நிலையத்தில் தல்பீர் சிங் இறக்கிவிடப்பட்டார். அதன் பின்னர் மற்ற பயணிகளுடன் விமானம் டில்லிக்கு புறப்பட்டுச் சென்றது.
விமான நிலையத்தில் இருந்து, தல்பீர் சிங் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

