
கொப்பால் : கொப்பாலில் எதிர்பாராத வகையில், நேற்று திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கர்நாடகாவில் கடந்தாண்டு பருவமழை வழக்கம் போல் பெய்யாததால், வறட்சி ஏற்பட்டுள்ளது. கடுமையான தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
ஆறுகள், ஏரிகள், குளங்கள் உட்பட நீர் நிலைகள் வற்றியதால், கால்நடைகளுக்கும், வன விலங்குகளுக்கும் குடிப்பதற்கு தண்ணீர் இன்றி பாதிக்கப்பட்டுள்ளன.
மாநிலத்தின் கலபுரகி, யாத்கிர், பாகல்கோட், ராய்ச்சூர், கொப்பால், பல்லாரி ஆகிய ஆறு மாவட்டங்களில் நேற்று 40 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெப்பம் பதிவாகி இருந்தது. அனல் காற்றும் வீசியதால், மக்கள் சாலையில் நடமாடுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று மாலை கொப்பாலின் பல பகுதிகளில் வானம் இருண்டது. பலத்த காற்றுடன் மழை பெய்ய துவங்கியது. சிறிது நேரத்தில், மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
நகரின் ஹலகேரி கிராமத்தில் பலத்த காற்று வீசியதில், வீட்டின் கூரை பறந்து, அருகில் உள்ள விவசாய நிலத்தில் விழுந்தது. பல இடங்களில் குடியிருப்பு வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த மக்கள், திடீர் மழையால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

