ராமர் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி: அயோத்தி ராமர் கோயிலில் ராமநவமி அற்புதம்
ராமர் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி: அயோத்தி ராமர் கோயிலில் ராமநவமி அற்புதம்
UPDATED : ஏப் 17, 2024 04:16 PM
ADDED : ஏப் 17, 2024 02:19 PM

லக்னோ: ஸ்ரீ ராம நவமி தினமான இன்று (ஏப்ரல் 17) அயோத்தி ராமர் கோயிலில், சூரியனின் ஒளிக்கற்றைகள் திலகம் இட்டது போல, நேரடியாக ஸ்ரீ ராமர் உருவச்சிலையின் நெற்றியில் பட்டது பக்தர்களை பரவசப்படுத்தியது.
உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில், ராமர் கோயில் கும்பாபிஷேக விழா, கடந்த ஜனவரி 22ம் தேதி நடந்தது. இதன் பின், விழா நிறைவடைந்த மறுநாள் முதல், தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து, வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.
இந்நிலையில், ராமநவமி திருநாளான இன்று (ஏப்ரல் 17) அயோத்தி ராமர் கோயிலில் சரியாக மதியம் 12.16 மணிக்கு கருவறையில் உள்ள ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளிபடும் அரிய நிகழ்வு நடந்துள்ளது. சூரியனின் ஒளிக்கற்றைகள், திலகம் இட்டது போல, நேரடியாக ஸ்ரீ ராமர் உருவச்சிலை மீது பட்டது பக்தர்களை பரவசப்படுத்தியது.
இந்த நிகழ்வு 5 நிமிடம் நீடித்துள்ளது. இந்த அரியநிகழ்வை காண ஏராளமான பக்தர்கள் ராமர் கோயிலில் கூடினர். அவர்கள் ஜெய் ஸ்ரீ ராம் கோஷமிட்டு ராமர் மீதான தங்களின் அன்பை வெளிப்படுத்தினர். சூரிய ஒளி ராமரின் நெற்றியில் நேரடியாக விழும் அளவிற்கு நேர்த்தியாக ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. சூரிய ஒளி ராமரின் நெற்றியில் விழும் படியாக வடிவமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி வழிபாடு
அயோத்தியில் ராமர் நெற்றியில் சூரிய ஒளி விழுந்தது. இந்த வீடியோவை விமான பயணத்தின் போது 'டேப்'ல் பிரதமர் மோடி பார்த்து வழிப்பட்டார். இந்த புகைப்படத்தை எக்ஸ் சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.
மேலும், ‛‛அயோத்தியில் ராமர் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி காட்சியை காணும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. கோடிக்கணக்கான இந்தியர்களைப் போலவே எனக்கும் இது மிகவும் உணர்ச்சிகரமான தருணம். இந்த சூரிய திலகம் வளர்ந்த இந்தியாவின் ஒவ்வொரு தீர்மானத்தையும் அதன் தெய்வீக ஆற்றலால் ஒளிரச் செய்யும்'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

