சன்னி லியோன் நடன நிகழ்ச்சி கேரள பல்கலை அனுமதி மறுப்பு
சன்னி லியோன் நடன நிகழ்ச்சி கேரள பல்கலை அனுமதி மறுப்பு
ADDED : ஜூன் 13, 2024 11:32 PM

திருவனந்தபுரம், கேரளாவில் உள்ள பல்கலை பொறியியல் கல்லுாரியில், நடிகை சன்னி லியோனின் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
பிரபல ஹிந்தி நடிகையான சன்னி லியோன், தமிழ் உட்பட பிறமொழி படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் மலையாளப் படம் ஒன்றிலும் நடிக்கத் தேர்வாகியுள்ளார்.
இந்நிலையில், கேரளாவின் திருவனந்தபுரம் அடுத்த கார்யவோட்டம் பகுதியில் அமைந்துள்ள பல்கலை பொறியியல் கல்லுாரியில் சன்னி லியோனின் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுஇருந்தது.
அடுத்த மாதம் 5ம் தேதி நடக்கவுள்ள நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாணவர் குழுவினர் செய்து வந்தனர். இதற்காக பல்கலை நிர்வாகத்திடம் அவர்கள் அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், 'அடுத்த மாதம் 5ம் தேதி நடக்கும் கலை நிகழ்ச்சியின் நிகழ்ச்சி நிரலில், சன்னி லியோனின் நடன நிகழ்ச்சியை சேர்க்க வேண்டாம்' என அந்த பல்கலை துணைவேந்தர் மோகனன் குன்னும்மாள் உத்தரவிட்டுள்ளார்.
இதை உறுதிப்படுத்துமாறு பல்கலை பதிவாளருக்கு, கடிதம் எழுதியுள்ள அவர், சன்னி லியோனின் நடன நிகழ்ச்சியை பல்கலை வளாகத்திலோ அல்லது அருகிலோ நடத்த அனுமதி இல்லை என தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பரில், கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலையில் நடந்த இசை நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி நான்கு மாணவர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு கேரள அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.