UPDATED : ஆக 02, 2025 12:42 AM
ADDED : ஆக 02, 2025 12:38 AM

புதுடில்லி : நம் கடற்படையின், 47வது துணைத்தலைவராக வைஸ் அட்மிரல் சஞ்சய் வத்சயன் நேற்று பொறுப்பேற்றார்.
துணை தலைவராக இருந்த வைஸ் அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன், நேற்று முன்தினம் பணி ஓய்வு பெற்றதையடுத்து, அப்பதவிக்கு சஞ்சய் வத்சயன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அனுபவம் மஹாராஷ்டிராவின் புனேவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவரான வைஸ் அட்மிரல் சஞ்சய் வத்சயன், 1988-ம் ஆண்டு ஜனவரி 1ல் இந்திய கடற்படையில் பணியமர்த்தப்பட்டார்.
இவர், கடற்படை திட்டங்களின் முதன்மை இயக்குநர், பணியாளர்களுக்கான இணை இயக்குநர் போன்ற பல்வேறு பிரிவுகளில் 30 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார்.
இந்திய கடற்படையின் நிஷாங்க், விபூதி உட்பட பல்வேறு போர்க்கப்பல்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட சஞ்சய் வத்சயன், 2020ம் ஆண்டு பிப்ரவரியில், கிழக்கு கடற்படையின் கொடி அதிகாரியாக பொறுப்பேற்றார். இவரது சேவையை அங்கீகரிக்கும் வகையில், 2021ல், 'அதி விஷிஷ்ட் சேவா' பதக்கம் வழங்கப்பட்டது.
இதுதவிர ஒருங்கிணைந்த பாதுகாப்பு பணியாளர்கள் தலைமையகத்தின் துணை தலைவராகவும் சஞ்சய் வத்சயன் பணியாற்றினார். அங்கு பணியாளர்களுக்கான செயல்பாடுகளை ஒருங்கிணைப்பது, படைகளை மேம்படுத்துவது உள்ளிட்டவற்றுடன், உள்நாட்டுமயமாக்கலை ஊக்குவிக்கும் கொள்கைகளை உருவாக்குவதிலும் பெரும் பங்காற்றினார்.
துணை தளபதி இதேபோல் ராணுவத்தின் துணை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் புஷ்பேந்திர சிங் நேற்று முன்தினம் பொறுப்பேற்றார். கடந்த 1987ல் நான்காவது பட்டாலியனின் பாராசூட் ரெஜிமென்ட்டில் நியமிக்கப்பட்டார். 38 ஆண்டுகளாக பணியாற்றி வரும் இவர், பல்வேறு பொறுப்புகளையும் வகித்துள்ளார்.
இவரது சேவையை பாராட்டி மத்திய அரசு சார்பில், 'அதி விஷிஷ்ட் சேவா' மற்றும் 'பார் டு சேனா' விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளன.