ரஷ்யாவிடம் எரிசக்தி வாங்கி இந்தியா கடுப்பேற்றுகிறது; அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரூபியோ ஆவேசம்
ரஷ்யாவிடம் எரிசக்தி வாங்கி இந்தியா கடுப்பேற்றுகிறது; அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரூபியோ ஆவேசம்
ADDED : ஆக 02, 2025 12:29 AM

வாஷிங்டன்: ''இந்தியா நட்பு நாடு தான். ஆனால் வெளியுறவு கொள்கையில், அனைத்து விவகாரங்களிலும் அந்நாடு, 100 சதவீதம் ஒத்துப் போவதில்லை. ரஷ்யாவிடம் இருந்து அந்நாடு தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவதே, நாங்கள் கடுப்பானதற்கு காரணம்,'' என, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, 2022ல் ரஷ்யா போர் தொடுத்தது. இதனால் அதிருப்தி அடைந்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்தன.
இதை சமாளிக்க தள்ளுபடி விலையில், அந்நாடு கச்சா எண்ணெயை விற்பனை செய்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்திய நம் நாடு, குறைந்த விலையில் கச்சா எண்ணெயை வாங்கி வருகிறது.
இது, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு பிடிக்கவில்லை.
இதை கண்டுகொள்ளாத நம் நாடு, ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெயை வாங்கி வருகிறது.
இதனால் கடுப்பான அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஆக., 1 முதல், இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பதாகவும், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால், அபராதம் விதிப்பதாகவும் அறிவித்தார்.
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ கூறியதாவது:
இந்தியாவுக்கு மிகப்பெரிய எரிசக்தி தேவை உள்ளது. அதன்படி, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குகிறது. உலக நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளதால், மலிவு விலையில் கச்சா எண்ணெயை ரஷ்யா விற்பனை செய்கிறது.
இதை இந்தியா வாங்குவதால், துரதிருஷ்டவசமாக, உக்ரைன் உடனான ரஷ்யாவின் போருக்கு உதவி செய்கிறது. இது, எங்களை எரிச்சல் அடையச் செய்கிறது.
சந்தையில் பல எண்ணெய் விற்பனையாளர்கள் இருந்தும், ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதே அதிபர் டிரம்பின் விரக்திக்கு காரணம். இவ்வாறு அவர் கூறினார்.

