காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே: கவர்னர் அளித்துள்ள அனுமதிக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்தப்படும். முதல்வர் சித்தராமையா, எந்த காரணத்துக்கும் ராஜினாமா செய்ய மாட்டார். மத்திய பா.ஜ., அரசின் உத்தரவுப்படி, கவர்னர் செயல்படுகிறார்.எந்த அடிப்படையில், முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பா.ஜ.,வினர் வலியுறுத்துகின்றனர் என்பது புரியவில்லை. கவர்னர் மூலம், காங்கிரஸ் ஆட்சிக்கு தொந்தரவு கொடுக்கின்றனர். நல்லாட்சிக்கு இடையூறு செய்கின்றனர்.கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக, மத்திய விசாரணை அமைப்புகள் மூலம், தாங்கள் ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு பா.ஜ., தொந்தரவு கொடுக்கிறது.* துணை முதல்வர் சிவகுமார்:சித்தராமையா எங்கள் முதல்வர். அவர் முதல்வராக நீடிப்பார். எந்த நெருக்கடிக்கும் அடிபணிய மாட்டோம். மக்கள் நலனுக்காக தொடர்ந்து சேவை புரியவோம். காங்கிரஸ் மட்டுமின்றி, ஒட்டு மொத்த 'இண்டியா' கூட்டணி கட்சிகளும் முதல்வருக்கு ஆதரவாக இருக்கின்றன.ராஜ்பவனை பா.ஜ., அலுவலகமாக மாற்றிக் கொண்டுள்ளதை கண்டித்து போராட்டம் நடத்துவோம். ஜனநாயகம் மற்றும் அரசியல் அமைப்பை காக்க வேண்டியுள்ளது. முதல்வருக்கு எதிராக சட்டவிரோதமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.நாட்டின் சட்டம், எங்களை பாதுகாக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. நீதிமன்றம் எங்களுக்கு அநீதி செய்யாது. எனவே சட்டப் போராட்டத்துக்கு தயாராகிறோம்.பிற்படுத்தபட்ட பிரிவைச் சேர்ந்த சித்தராமையா, இரண்டாவது முறையாக முதல்வராகி இருப்பதை, சகித்துக் கொள்ள முடியாமல், பா.ஜ., மேலிடம் சூழ்ச்சி செய்கிறது. வாக்குறுதித் திட்டங்கள் மூலம், 56,000 கோடி ரூபாய் நிதியை, ஏழை மக்களுக்கு செலவு செய்கிறோம்.காங்கிரஸ் ஆட்சியை அகற்ற சூழ்ச்சி நடக்கிறது. எங்கள் ஆட்சியை எந்த காரணத்துக்கும் நீக்க முடியாது. ஒரு கவர்னர் எப்படி செயல்பட வேண்டும் என்பதை, மேற்கு வங்கம், கேரளா, தமிழகம், ஜார்க்கண்ட், தெலுங்கானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் வழக்குகளில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.முதல்கட்ட விசாரணை கூட நடத்தாமல், முதல்வர் மீது விசாரணை நடத்த அனுமதி அளிப்பது சரியில்லை.