ADDED : மார் 08, 2025 02:19 AM

மது கடைகள் சர்ச்சை
கட்டுமான வளர்ச்சி, சமூக நலன், கல்வி, கலாசாரம் போன்ற துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மதுக்கடைகள் ஏலத்தில் விடப்படும் திட்டம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசு பணிகளை மேம்படுத்துவதற்காக சம்பள உயர்வு செய்ததை எதிர்க்கட்சிகள், கடுமையாக விமர்சித்துள்ளனர். திட்டங்கள் பெரிய அளவில் உள்ளன. ஆனால் அவற்றின் வெற்றியை நடைமுறைபடுத்தினால் மட்டுமே தீர்மானிக்க முடியும்.
தி.கோ.தாமோதரன்,
முன்னாள் தலைவர்,
பெங்களூரு தமிழ் சங்கம்
------------
அல்வா துண்டு?
எஸ்.சி., - எஸ்.டி., சமூகத்தினருக்கு எதிரான வன்கொடுமையை தடுக்க 33 சிறப்பு போலீஸ் நிலையங்கள்; எஸ்.சி., காலனிகளின் உள் கட்டமைப்புகளுக்கு 559 கோடி ரூபாய் நிதி ஒதுக்குவதாகவும் தெரிவித்துள்ளனர். இது எஸ்.சி., - எஸ்.டி., எம்.எல்.ஏ.,க்களை சமாதானப்படுத்தும் நோக்கமே தவிர, சமத்துவ சிந்தனையாக தெரியவில்லை. எஸ்.சி.,க்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்ற வலியுறுத்தல் பலமாக இருப்பதால், இந்த 'அல்வா துண்டு' போதுமென நினைக்கின்றனரோ.
கே.கலைச்செல்வி,
பொம்மனஹள்ளி, பெங்களூரு.
----------------
தொலைநோக்கு பார்வை
நுாறு அரசு தொடக்கப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், 50 உயர்நிலைப் பள்ளிகளை கல்லுாரிகளாக தரம் உயர்த்துவதாக அரசு அறிவித்துள்ளது. ஒருபுறம் வரவேற்றாலும் அரசு பள்ளிகளின் கட்டடங்களை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு தேவையான நிதி ஒதுக்க வேண்டும். மற்ற துறைகளை விட கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசு தான் மாநில வளர்ச்சிக்கு ஏற்ற தொலைநோக்கு பார்வையாக இருக்கும்.
ஆர்.மஞ்சுளா தேவி,
ஆசிரியை, எச்.ஏ.எல்.,
-------------------------
தொழில் கொள்கை
சிறு, குறு தொழில்களுக்கு ஏற்றதாக பட்ஜெட் உள்ளது. ஆனாலும் இந்த துறையின் வளர்ச்சிக்கு, இன்னும் கூடுதல் நிதி ஒதுக்கி இருக்கலாம். தனியார் தொழில்துறை பகுதிகளில், சிறு தொழில்கள் செயல்பட தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை. இவ்விஷயத்தில் அரசு கவனம் செலுத்தி இருக்கலாம். சிறு, குறு நிறுவனங்களுக்கு தனி தொழில்துறை கொள்கை வகுப்பது வரவேற்கத்தக்கது.
எம்.ராஜகோபால், தலைவர், சிறு, குறு தொழில்கள் சங்கம்
==========
ஒன்றுமே இல்லை
பட்ஜெட்டில் உள்கட்டமைப்புக்கு எந்த அறிவிப்பும் இல்லை. வாக்குறுதி திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் பணத்தை குறைத்து, வளர்ச்சி பணிகளுக்கு பணம் ஒதுக்குவர் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அதுவும் நடக்கவில்லை. வாக்குறுதி திட்டங்கள் மீது பணத்தை போட்டு உள்ளனர். முஸ்லிம் சமூகத்திற்கு நிறைய கொடுத்து உள்ளனர். எஸ்.சி., -- எஸ்.டி., மக்களுக்கு எதுவும் இல்லை. நிறைய எதிர்பார்த்த பெங்களூருக்கும் ஒன்றுமே இல்லை.
பாபு கே.தேவர், பட்டய கணக்கர்.
===========
நிரந்தர தீர்வு இல்லை
தங்கவயலில் சுத்தமான குடிநீருக்கு நிரந்தர தீர்வு எதுவும் இல்லை. எரகோள் அணை நீர் தங்கவயலுக்கும் கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தது. அறிவிக்கப்படாதது ஏமாற்றம். சுத்திகரிக்கப்படாத போர்வெல் நீரை ஒரு குடம் 3:00 ரூபாய்க்கு வாங்கி பயன்படுத்த வேண்டும். இதை விட்டால் வேறு வழியில்லை. சுத்திகரிக்கப்படாத நீரை பயன்படுத்துவதால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. பாதிப்பே இல்லாத நிரந்தர குடிநீர் எப்போது கிடைக்கும்?
ஏ.ஜெயலட்சுமி, குடும்ப தலைவி, தங்கவயல்
***
ஏமாற்றம்
தங்கவயலில் தொழிற்பூங்காவுக்கு நிதி ஒதுக்கீடு பற்றி அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அறிவிக்கப்படவில்லை. தங்கவயல் இளைஞர்களின் எதிர்க்காலமே வேலை வாய்ப்பு தான். இதற்கு தொழிற் பூங்கா முத்தாய்ப்பாக இருக்கும் என நம்பினோம். ஆனால், தொழிற்பேட்டைக்கான இடமாக பெயர் பலகையை மட்டுமே வைத்துள்ளனரே தவிர ஆக்கப்பூர்வமான செயல் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு இல்லாதது ஏமாற்றம் தான்.
ஆர்.மதிவாணன், ஓய்வு டி.ஆர்.டி.ஓ., அதிகாரி, தங்கவயல்
---------------------------
* குறை பிடிக்காது
இந்த பட்ஜெட் நன்றாக உள்ளது. பட்ஜெட்டில் பல நல்ல திட்டங்கள் உள்ளன. மாநில அரசு சிறப்பாக செயல்படுகிறது. மற்றவர்கள் போல எனக்கு குறை சொல்வது பிடிக்காது. மக்களுக்கு நல்லது செய்வதற்கு மேலும் பல திட்டங்களை அரசு கொண்டு வர வேண்டும்.
மதுரம் வீரமணி
இல்லத்தரசி, சி.வி., ராமன் நகர்.
------------------
* விழிப்புணர்வு திட்டங்கள்
பட்ஜெட்டில் பெண்கள் முன்னேற்றத்திற்கான பல திட்டங்கள் உள்ளன. ஆனால், கிரஹலட்சுமி பணம் போல குறிப்பிட்ட சிலர் மட்டும் பயனடையும் வகையில் திட்டங்கள் இருக்க கூடாது. பெண்கள் முன்னேற்றம் தொடர்பான திட்டங்கள் நிறைய இருந்தாலும், இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பலருக்கும் திட்டங்கள் பற்றி தெரிவதில்லை.
என்.பிரியதர்ஷினி
தொழில் முனைவோர்,
ராஜாஜி நகர், பெங்களூரு.
-------
* மாற்றம் வராது
இது ஒரு வழக்கமான பட்ஜெட்டே. இதனால் எந்த மாற்றமும் வரப்போவதில்லை. கிரஹலட்சுமி திட்டத்திற்காக அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசிற்கு மேலும் சுமையே சேர்க்கும். இதுபோன்ற இலவச திட்டங்களை முதலில் நிறுத்த வேண்டும். இலவச திட்டங்களால் அனைத்து துறைகளும் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன.
தி.செல்வராஜ்
மென்பொருள் பொறியாளர்,
பானஸ்வாடி, பெங்களூரு.
---------------
* பொய்த்தது
பட்ஜெட்டில் பல திட்டங்கள் இருந்தாலும், இவை அனைத்தும் மக்களை சரியாக சென்றடையுமா என்பது சந்தேகமே. குடிசை பகுதியில் வாழும் பெண்களுக்கு கிரஹலட்சுமி, அன்னபாக்யா போன்ற திட்டங்கள் சரியாக சென்றடைவதில்லை. இதை கண்காணிக்க அரசு ஒரு குழுவை அமைக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை.
ஜெ.தீர்த்தனா
சமூக செயற்பாட்டாளர்,
தங்கவயல்.
***