சுயேச்சை ரகுபதி பட்டுக்கு ஆதரவு ;பா.ஜ.,வுக்கு ஈஸ்வரப்பா அதிர்ச்சி
சுயேச்சை ரகுபதி பட்டுக்கு ஆதரவு ;பா.ஜ.,வுக்கு ஈஸ்வரப்பா அதிர்ச்சி
ADDED : மே 21, 2024 09:53 PM

தென்மேற்கு பட்டதாரி தொகுதி தேர்தலில் பா.ஜ.,வுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், சுயேச்சை வேட்பாளர் ரகுபதிபட்டுக்கு, முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா ஆதரவு அளித்துள்ளார்.
மேலவை தேர்தல் தேதி அறிவித்த நாள் முதல், கர்நாடகா பா.ஜ., தொடர்ந்து பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இத்தேர்தலில் தெற்கு ஆசிரியர் தொகுதியில் முதலில் ம.ஜ.த., - பா.ஜ., கூட்டணி வேட்பாளராக நிங்கராஜ் கவுடவை அறிவித்தது. ஆனால், ம.ஜ.த.,வுடன் நடந்த தொகுதி பங்கீட்டில், இத்தொகுதி ம.ஜ.த.,வின் விவேகானந்தனுக்கு கொடுக்கப்பட்டது. இதனால் அதிருப்தியில் இருந்தவர்களை இரு கட்சி தலைவர்களும் சமாதானம் செய்தனர்.
சில நாட்கள்
ஆனால், இந்த நிம்மதி சில நாட்கள் மட்டுமே இருந்தது. தாவணகெரே, ஷிவமொகா, உடுப்பி, சிக்கமகளூரு, தட்சிண கன்னடா, குடகு ஆகியவை தென்மேற்கு பட்டதாரி தொகுதிக்கு உட்பட்டு உள்ளது.
சட்டசபை தேர்தலில் உடுப்பி தொகுதியில் பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., ரகுபதி பட்டுக்கு சீட் மறுக்கப்பட்டது. ஆனாலும், கட்சி வேட்பாளர் வெற்றி பெற காரணமாக இருந்தார். கர்நாடக மேலவைக்கு நடக்கும் தேர்தலில் சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார், ஆனால், இத்தொகுதிக்கு தனஞ்செயஜா சர்ஜியை கட்சி அறிவித்தது.
இதனால் அதிருப்தி அடைந்த ரகுபதி பட், சுயேச்சையாக போட்டியிட தீர்மானித்தார். இதையறிந்த கட்சி தலைவர்கள், அவரை சந்தித்து சமாதானம் செய்ய முயற்சித்தும் பலனில்லை. தற்போது தென்மேற்கு பட்டதாரி தொகுதி சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
பட்டதாரிகள் ஆதரவு
தாவணகெரே, ஷிவமொகா, உடுப்பி, சிக்கமகளூரு, தட்சிண கன்னடா, குடகு ஆகிய மாவட்டங்களில் உள்ள பட்டதாரிகளை சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார்.
இந்நிலையில், ஷிவமொகாவில் பா.ஜ.,வின் முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பாவை, நேற்று ரகுபதி பட் சந்தித்து ஆதரவு கேட்டார். ஏற்கனவே, பா.ஜ., மீது அதிருப்தியில் உள்ள முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா, லோக்சபா தேர்தலில் ராகவேந்திராவை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்டார்.
தற்போது மேலவை தேர்தலில் கட்சிக்கு எதிராக சுயேச்சையாக களமிறங்கும் ரகுபதி பட்டுக்கும் ஈஸ்வரப்பா ஆதரவு தெரிவித்து உள்ளதால், பா.ஜ.,வுக்கு மீண்டும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளார்.
ரகுபதி பட்டுக்கு சால்வை அணிவித்து, ஈஸ்வரப்பா வாழ்த்து தெரிவித்தார்.
- நமது நிருபர் -

