ஜாமின் மனு விசாரணை நீண்ட காலத்துக்கு ஒத்திவைப்பு உச்ச நீதிமன்றம் வேதனை
ஜாமின் மனு விசாரணை நீண்ட காலத்துக்கு ஒத்திவைப்பு உச்ச நீதிமன்றம் வேதனை
ADDED : மார் 07, 2025 12:51 AM

புதுடில்லி : 'ஜாமின் மனுக்கள் மீதான விசாரணையை நீண்ட காலத்துக்கு ஒத்திவைப்பது வேதனை அளிப்பதாக உள்ளது. இது, தனிமனிதனின் சுதந்திரம் தொடர்பானது; விரைந்து முடிவு எடுக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் ஒருவர் ஜாமின் கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு, ஏப்ரல் மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அவரது 2 வயது பெண் குழந்தைக்கு உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருப்பதால், அவசரமாக இடைக்கால ஜாமின் கேட்டு விண்ணப்பித்தார். கடந்த மாதம் 21ம் தேதி இதை விசாரித்த உயர் நீதிமன்றம், ஜாமின் தொடர்பான வழக்கை விசாரிக்கும் தினமான ஏப்., 22ம் தேதிக்கு அதையும் ஒத்தி வைத்தது.
இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார்.
இதை விசாரித்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய், அகஸ்டின் ஜார்ஜ் மாஷி அமர்வு கூறியதாவது:
ஜாமின் தொடர்பான மனுக்களில் அவற்றை நீண்ட காலத்துக்கு ஒத்தி வைப்பது முறையானதல்ல. இது, தனி மனிதனின் சுதந்திரம் தொடர்பானது.
இந்த குறிப்பிட்ட வழக்கில், தன் குழந்தையின் அறுவை சிகிச்சைக்காக அவசர ஜாமின் கேட்டுள்ளார். அதை இரண்டு மாதங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது, முறையான நடவடிக்கையாக தெரியவில்லை.
கூடிய மட்டும் மனிதாபிமானத்துடன், சட்டத்துக்கு உட்பட்டு நீதிமன்றங்கள் செயல்பட வேண்டும். மனுதாரர் மீண்டும் அவசர ஜாமின் மனுவை தாக்கல் செய்யட்டும். அதை உயர் நீதிமன்றம் உடனே விசாரித்து, தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.