நிதிஷை விமர்சித்த எம்.எல்.சி.,யின் பதவியை பறித்த உத்தரவை ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்
நிதிஷை விமர்சித்த எம்.எல்.சி.,யின் பதவியை பறித்த உத்தரவை ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்
ADDED : பிப் 26, 2025 02:11 AM

புதுடில்லி பீஹார் மாநில சட்ட மேலவையில், அம்மாநில முதல்வர் நிதிஷ் குமாரை கிண்டல் அடித்ததற்காக, சபையிலிருந்து நீக்கப்பட்ட, ஆர்.ஜே.டி., கட்சியின் எம்.எல்.சி., சுனில்குமார் சிங் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை, சுப்ரீம் கோர்ட் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார், ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள, அடிக்கடி கூட்டணியை மாற்றிக் கொள்கிறார் என கூறி, சட்ட மேலவையில் ஆர்.ஜே.டி., எனப்படும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.சி., சுனில்குமார் சிங் கடந்த ஆண்டு கிண்டல் அடித்தார்.
இதற்காக அவர் சபையில் இருந்து நீக்கப்பட்டார். அதையடுத்து, அவருக்கு பதில், புதிதாக ஒருவரை தேர்ந்தெடுப்பதற்காக, தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டது.
இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் எம்.எல்.சி., சுனில்குமார் சிங் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கை, சில நாட்களுக்கு முன் விசாரித்த நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் என்.கே.சிங் ஆகியோரை கொண்ட அமர்வு, 'எதிரணியினரை எப்படி விமர்சிப்பது என்பது கூட தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு மறந்து விட்டதோ' என கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில், அந்த வழக்கை நேற்று மீண்டும் விசாரித்த நீதிபதிகள், 'எம்.எல்.சி., சுனில்குமார் சிங் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை அதிகபட்சமானது; இதுவரை இல்லாதது' என கூறி, பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்தும் எம்.எல்.சி.,யாக தொடரவும் உத்தரவிட்டனர்.