ADDED : மார் 30, 2024 02:46 AM

பெங்களூரு: பெங்களூரு ரூரல் தொகுதி, காங்கிரஸ் வேட்பாளர் சுரேஷ், பா.ஜ., மூத்த தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்து ஆசிபெற்றார்.
துணை முதல்வர் சிவகுமாரின் சகோதரர் சுரேஷ், பெங்களூரு ரூரல் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இம்முறை இவரை தோற்கடிக்க, பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி கட்சிகள் முயற்சிக்கின்றன. தன் தம்பியை எதிர்க்கட்சிகள் குறிவைத்துள்ளதை உணர்ந்துள்ள சிவகுமார், பெங்களூரு ரூரல் தொகுதியில் கவனத்தை மையப்படுத்தியுள்ளார்.
கோவில்களை தரிசனம் செய்து, தம்பியின் வெற்றிக்காக வேண்டுகிறார். வேட்பாளர் சுரேஷ், தன் அண்ணன் சிவகுமார் உட்பட, மூத்த தலைவர்களின் ஆசி பெற்ற பின், ஊர்வலமாக சென்று நேற்று முன் தினம் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
இந்நிலையில், பா.ஜ., மூத்த தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணாவை, பெங்களூரின், சதாசிவநகரில் உள்ள இல்லத்தில், சுரேஷ் சந்தித்தார்.
கிருஷ்ணாவின் கால்களில் விழுந்துஆசி பெற்றுக்கொண்டார். பின் இருவரும் சிறிது நேரம் பேச்சு நடத்தினர்.
இவர்களின் சந்திப்பு, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
சுரேஷ் கூறுகையில், ''கிருஷ்ணா கர்நாடகாவின், மூத்த அரசியல் தலைவர். முன்னாள் முதல்வருமான அவரை நேற்று சந்தித்து ஆசி பெற்றேன். அவரது நீண்ட கால அரசியல் அனுபவம், ஆலோசனைகளை பகிர்ந்து கொண்டார். இது எனக்கு வழிகாட்டியாகஇருக்கும்,''” என்றார்.

