தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர்.காங்., பா.ஜ.,வின் பினாமி கட்சிகள்: ராகுல்
தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர்.காங்., பா.ஜ.,வின் பினாமி கட்சிகள்: ராகுல்
ADDED : மே 12, 2024 02:30 AM

கடப்பா: “தெலுங்கு தேசம், ஜனசேனா, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய மூன்றும் பா.ஜ.,வின் மாற்று அணிகளாக செயல்படுகின்றன,” என காங்கிரஸ் எம்.பி., ராகுல் குற்றஞ்சாட்டிஉள்ளார்.
ஆந்திராவில் உள்ள 25 லோக்சபா தொகுதி களுக்கும், 175 சட்ட சபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை தேர்தல் நடக்கஉள்ளது.
'ரிமோட் கன்ட்ரோல்'
இதையடுத்து, அரசியல் தலைவர்கள் நேற்று இங்கு இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். கடப்பாவில் போட்டியிடும் மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகளுமான ஒய்.எஸ்.ஷர்மிளாவை ஆதரித்து காங்கிரஸ் எம்.பி., ராகுல் ஓட்டு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
ஆந்திராவில் பா.ஜ.,வின் மாற்று கட்சியின் ஆட்சி நடக்கிறது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், பவன் கல்யாணின் ஜனசேனா, ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆகிய மூன்றையும் பிரதமர் நரேந்திர மோடி, 'ரிமோட் கன்ட்ரோல்' வாயிலாக டில்லியில் இருந்து இயக்குகிறார்.
அமலாக்கத் துறை, சி.பி.ஐ., உள்ளிட்டவை அவரது கட்டுப்பாட்டில் உள்ளது போல், இந்த தலைவர்களும் பிரதமரின் கட்டுப்பாட்டில் உள்ளனர்.
ஒற்றுமை யாத்திரை
என் தந்தையின் சகோதரரை போன்றவர் முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி. ஆந்திராவில் அவர் நடத்திய பாதயாத்திரையை முன்னோடியாக வைத்து பாரத ஒற்றுமை யாத்திரையை நடத்தினேன்.
மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி, மழலையர் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை இலவச கல்வி உட்பட தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, இடுபுலுபாயாவில் உள்ள ராஜசேகர ரெட்டியின் நினைவிடத்தில் ராகுல், ஷர்மிளா உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தினர். இதற்கிடையே, மகள் ஷர்மிளாவுக்கு ஆதரவாக அவரின் தாய் ஒ.எஸ். விஜயம்மா வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில், 'என் கணவர் ஒய்.எஸ்.ஆர்., போலவே அரசியலில் சேவை செய்ய வந்துள்ள மகள் ஷர்மிளாவை கடப்பா தொகுதி மக்கள் ஆதரிக்க வேண்டும்' என, அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.