ஜாதியே தெரியாதவர் கணக்கெடுப்பு பற்றி பேசுவதா? ராகுலை மறைமுகமாக விமர்சித்த அனுராக்
ஜாதியே தெரியாதவர் கணக்கெடுப்பு பற்றி பேசுவதா? ராகுலை மறைமுகமாக விமர்சித்த அனுராக்
ADDED : ஜூலை 31, 2024 01:47 AM

புதுடில்லி, ''தன் ஜாதி பெயரே தெரியாதவர் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசுவதா,'' என, பா.ஜ., - எம்.பி., அனுராக் தாக்குர் லோக்சபாவில் நேற்று ராகுலை மறைமுகமாக விமர்சித்தார்.
மகாபாரதத்தின் சக்கர வியூகத்துடன் ஒப்பிட்டு மத்திய அரசை விமர்சித்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு, பா.ஜ.,வின் முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் நேற்று பதிலடி கொடுத்தார். இதனால், சபையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
சக்கர வியூகம்
பட்ஜெட் தொடர்பான விவாதத்தில் நேற்று முன்தினம் பேசிய காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், அரசை கடுமையாக விமர்சித்தார்.
'நாடு தற்போது ஆறு பேரின் கைகளில் உள்ளது. மத்திய அரசு வகுக்கும் எந்த சக்கர வியூகத்தையும் நாங்கள் உடைத்தெறிவோம், என்று அவர் பேசினார்.
மேலும், 'பட்ஜெட் குறித்து விமர்சிக்கையில், அல்வா கிண்டுவதில்கூட, தலித், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வாய்ப்பு தரவில்லை' என, அவர் பேசினார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர், லோக்சபாவில் நேற்று பேசியதாவது:
மகாபாரதத்தில் சக்கரவியூகத்தில் அபிமன்யூ கொல்லப்பட்டார். மத்திய அரசு வகுக்கும் இதுபோன்ற சக்கர வியூகங்களால் மக்கள் அச்சத்தில் உள்ளதாகவும், அந்த வியூகத்தை உடைத்தெறிவோம் என்றும் ராகுல் கூறியுள்ளார்.
மேலும், சக்கர வியூகத்துக்கு, பத்ம வியூகம் என்றும் பெயர் உள்ளது என்று, பா.ஜ.,வின் தேர்தல் சின்னமான, தாமரையை குறிக்கும் வகையில் அவர் பேசியுள்ளார்.
ராகுலின் தந்தையும், முன்னாள் பிரதமருமான ராஜிவின் பெயருக்கும், தாமரை என்று அர்த்தம். அப்படியானால், அவருடைய பெயரும் வன்முறையை, அச்சத்தை குறிப்பிடுகிறதா?
ராகுலின் காங்கிரசுக்கு, ஓ.பி.சி., என்றால், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் என்று அர்த்தம் கிடையாது. தன் மைத்துனருக்கு கமிஷன் என்பதே ராகுலின் விளக்கமாகும்.
ஓ.பி.சி., பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க ராஜிவ் எதிர்ப்பு தெரிவித்தது ராகுலுக்கு தெரியுமா. தன் ஜாதி பெயரே தெரியாதவர் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசலாமா?
தன்னை மிகவும் அமைதியானவர் என்பதை காட்டிக் கொள்வதற்காக, யாரோ எழுதிக் கொடுத்ததை இங்கு அவர் படித்துள்ளார்.
பட்ஜெட் தயாரிப்பின்போது அல்வா கிண்டும் நிகழ்ச்சி குறித்தும் ராகுல் விமர்சித்துள்ளார். போபர்ஸ், காமன்வெல்த் போட்டி, 2ஜி, கால்நடை தீவனம், நிலக்கரி, நேஷனல் ஹெரால்டு என, பல வகையான ஊழல்களில் கிடைத்த அல்வாவை யார் சாப்பிட்டது. அது இனிப்பாக இருந்ததா என்பதை அவரால் கூற முடியுமா.
இவ்வாறு அனுராக் தாக்குர் சரமாரியாக பதிலடி கொடுத்தார்.
கவலையில்லை
''நீங்கள் என்னை எவ்வளவு தரக்குறைவாக பேசினாலும், என்னை இழிவுபடுத்த நினைத்தாலும் கவலையில்லை. ஜாதிவாரி கணக்கெடுப்பை இந்த சபையில் நிறைவேற்றி காட்டுவோம்,'' என, ராகுல் அதற்கு பதிலளித்தார்.
இதற்கிடையே, ராகுல் பற்றி, அனுராக் தாக்குர் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களை சபை குறிப்பிலிருந்து நீக்குவதாக சபாநாயகர் தெரிவித்தார்.
இது குறித்து அனுராக் தாக்குர் கூறுகையில், ''யாரையும் நேரடியாக பெயரை குறிப்பிட்டு நான் பேசவில்லை,'' என்றார்.

