ஐந்து புலிகள் காப்பகங்களை நிர்வகிக்கும் பொறுப்பு தமிழ் ஐ.எப்.எஸ்., அதிகாரி ரமேஷ் குமார் நியமனம்
ஐந்து புலிகள் காப்பகங்களை நிர்வகிக்கும் பொறுப்பு தமிழ் ஐ.எப்.எஸ்., அதிகாரி ரமேஷ் குமார் நியமனம்
ADDED : மே 05, 2024 05:48 AM

சாம்ராஜ் நகர்: கர்நாடகாவில் உள்ள ஐந்து புலிகள் காப்பகங்களை நிர்வகிக்கும் மிக பெரிய பொறுப்பில், தமிழ் ஐ.எப்.எஸ்., அதிகாரியான ரமேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
சாம்ராஜ்நகர் மாவட்டம், குண்டுலுபேட்டில் பண்டிப்பூர் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்த காப்பகத்தின் இயக்குனராக புதுச்சேரியை சேர்ந்த தமிழ் ஐ.எப்.எஸ்., அதிகாரி ரமேஷ்குமார், 2022 பிப்ரவரியில் நியமிக்கப்பட்டார்.
நாட்டின் 50வது புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் விழாவை ஒட்டி, பிரதமர் நரேந்திர மோடி, பண்டிப்பூர் புலிகள் காப்பகத்துக்கு கடந்தாண்டு வந்திருந்தார். ரமேஷ் குமார் பணியை பிரதமர் பாராட்டினார்.
மனித - வன விலங்குகள் மோதலைத் தடுக்கவும், பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் இவர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அத்துடன் வனத்தையும், விலங்குகளையும் பாதுகாக்க வேண்டியது குறித்து, 'பண்டிப்பூர் யுவ மித்ரா' என்ற விழிப்புணர்வு திட்டம் அறிமுகம் செய்தார்.
இத்திட்டத்தின் கீழ், 2023 மார்ச் 3ம் தேதி முதல், 2024 மார்ச் 8ம் தேதி வரை, 162 நாட்களில், 8,410 பேர் பங்கேற்றனர். இதில், 7,019 மாணவர்கள், 655 ஆசிரியர்கள், 197 கிராம பஞ்சாயத்து ஊழியர்கள், 395 உள்ளூர் விவசாயிகள், 143 உள்ளூர் பழங்குடியினர் அடங்குவர்.
இத்திட்டம் தற்போது, இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இதற்கான சான்றிதழை, ரமேஷ்குமாரிடம் இரண்டு நாட்களுக்கு முன்பு, பண்டிப்பூரில் வழங்கப்பட்டது.
இதற்கிடையில், அவரது சிறந்த பணியால் தற்போது, மைசூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் புலிகள் திட்டத்தின் வன பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடகாவில் உள்ள பண்டிப்பூர், நாகரஹொளே, பிலிகிரிரங்கா, பத்ரா, காளி ஆகிய ஐந்து புலிகள் காப்பங்களையும் நிர்வகிக்கும் மிக பெரிய பொறுப்பு அவருக்குகிடைத்துள்ளது.