மழைநீர் தெறித்ததால் டேங்கர் சேதம் கோஷ்டி மோதலில் ஒருவர் கொலை
மழைநீர் தெறித்ததால் டேங்கர் சேதம் கோஷ்டி மோதலில் ஒருவர் கொலை
ADDED : ஜூலை 05, 2024 01:43 AM
சங்கம் விஹார்: தெற்கு டில்லியில் ஆட்டோ பயணியர் மீது தேங்கிய மழைநீர் தெறித்ததால் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். மற்றொருவருக்கு கத்திக்குத்து விழுந்தது.
சங்கம் விஹாரில் புதன்கிழமை மாலை பழுதாகி நின்ற ஆட்டோவை சிலர் சரி செய்து கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியே வேகமாக டேங்கர் லாரி சென்றதால், சாலையில் தேங்கியிருந்த மழைநீர், ஆட்டோவை சரி செய்து கொண்டிருந்த ஆரிப் கான் என்ற விசு, 18, ஷகீல், 18, துர்கா, 24, மற்றும் பலர் மீது தெறித்தது.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், கற்களை வீசி டேங்கர் லாரியை சேதப்படுத்தினர். டேங்கர் டிரைவர் சபன் சிங், 35, லாரியில் இருந்து இறங்கி வந்தார். அவருக்கும் ஆட்டோ டிரைவரை சார்ந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது சங்கம் விஹாரைச் சேர்ந்த ஷாதாப் என்ற சதாம் வெட்டப்பட்டார். டேங்கர் டிரைவர் வாகனத்தை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு தப்பியோடினார். சதாமை அவரது ஊழியர்கள் பாத்ரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.
இதற்கிடையில், மற்றொரு ஆட்டோ டிரைவர் பப்லு அகமது, ஆட்டோ டிரைவர் தரப்பினரிடம் ''டேங்கரை ஏன் சேதப்படுத்துகிறீர்கள்?'' என கேட்டார். இதனால், அவரையும் அந்த கும்பல் கத்தியால் குத்தியுள்ளனர்.
உடனடியாக மஜிடியா மருத்துவமனைக்கு பப்லு அகமது கொண்டு செல்லப்பட்டார். பின் தீவிர சிகிச்சைக்காக அங்கிருந்து சப்தர்ஜங் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.