வட்டியில்லா கடனுக்கு வரி வங்கி ஊழியர்களுக்கு சிக்கல்
வட்டியில்லா கடனுக்கு வரி வங்கி ஊழியர்களுக்கு சிக்கல்
ADDED : மே 09, 2024 10:34 PM

புதுடில்லி,: வங்கி ஊழியர்களுக்கு வழங்கப்படும் வட்டியில்லா கடன், கூடுதல் சலுகையே. அதனால், அதற்கு வரி பிடித்தம் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வருமான வரித்துறை சட்டங்களின்படி, எஸ்.பி.ஐ., எனப்படும் பாரத ஸ்டேட் வங்கி நிர்ணயித்துள்ள கடன்களுக்கான வட்டி விகிதங்களே, அடிப்படையாக வைத்துக் கொள்ளப்படும்.
வங்கிகள், ஊழியர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கினால், அந்த அடிப்படை வட்டி விகிதத்தின் அடிப்படையில் வருமான வரி செலுத்தப்பட வேண்டும்.
வருமான வரித்துறையின் இந்த சட்டப் பிரிவுகளை எதிர்த்து, சில வங்கி ஊழியர் சங்கங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இதை விசாரித்த நீதிபதிகள் சஞ்சிவ் கண்ணா, திபாங்கர் தத்தா அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
நாட்டிலேயே மிகப்பெரும் வங்கியாக உள்ளதால், எஸ்.பி.ஐ.,யின் வட்டி விகிதத்தை, அடிப்படையாக வைத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இது ஒருதலைப்பட்சமான முடிவு என்று எடுத்துக் கொள்ள முடியாது. சட்டப் பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க, இந்த கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வங்கி ஊழியர்களுக்கான வட்டியில்லா அல்லது சலுகை வட்டியிலான கடன்கள் என்பது, அவர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் சலுகையே. அதனால், இதற்கு வருமான வரி செலுத்த வேண்டியது கட்டாயமாகும்.
அதாவது, எஸ்.பி.ஐ.,யின் அடிப்படை வட்டியைவிட, குறைந்த வட்டி அல்லது வட்டியில்லா கடன் வழங்கினால், இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்துக்கு, வங்கி ஊழியர்கள் வரி செலுத்த வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.