ADDED : ஆக 30, 2024 11:54 PM
பெங்களூரு:
மகளிர் பி.ஜி.,க்குள் புகுந்து, இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து, பெங்களூரின் செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தமிழகத்தை சேர்ந்த 20 வயது இளம் பெண் ஒருவர், பெங்களூரின் பிரபலமான ஐ.டி., நிறுவனம் ஒன்றில் பணியாற்றினார்.
எலக்ட்ரானிக் சிட்டி இரண்டாவது ஸ்டேஜில் உள்ள பி.ஜி., ஒன்றில், தன் தோழியுடன் தங்கி இருந்தார். 2016 ஆகஸ்ட் 25ல், இரவு ஷிப்ட் முடிந்து அறைக்கு திரும்பினார்.
தலைவலி என்பதால், மாத்திரை சாப்பிட்டுவிட்டு துாங்கினார். தலைவலியால் கதவை தாழிட மறந்து விட்டார். தோழி ஊருக்கு சென்றிருந்ததால், இளம்பெண் தனியாக இருந்தார்.
அதிகாலை 2:30 மணி அளவில், திருடும் நோக்கில் அறைக்குள் புகுந்த நபர் ஒருவர், இளம்பெண் கழுத்தில் கத்தியை வைத்து, தங்க நகைகள், பணத்தை கேட்டு மிரட்டினார்.
அதன்பின் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, தப்பியோடினார்.
இது தொடர்பாக, இளம்பெண் கொடுத்த புகாரின்படி, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய பரப்பன அக்ரஹாரா போலீசார், முரளி, 28 என்பவரை கைது செய்தனர். கோலாரை சேர்ந்த இவர், திருடும் நோக்கில் பி.ஜி.,க்குள் புகுந்து, பெண்ணை பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார்.
விசாரணையை முடித்த போலீசார், பெங்களூரின் 54வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில், குற்றபத்திரிகை தாக்கல் செய்தனர்.
விசாரணையில், முரளியின் குற்றம் உறுதியானதால், இவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி அனிதா நேற்று தீர்ப்பளித்தார்.