உ.பி.,யில் வெடிகுண்டுகளுடன் பயங்கரவாதி கைது பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ., உடன் தொடர்பு அம்பலம்
உ.பி.,யில் வெடிகுண்டுகளுடன் பயங்கரவாதி கைது பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ., உடன் தொடர்பு அம்பலம்
ADDED : மார் 07, 2025 01:15 AM
லக்னோஉத்தர பிரதேசத்தில் கையெறி குண்டுகள், துப்பாக்கிகள், பயங்கர ஆயுதங்களுடன் பயங்கவாதி கைது செய்யப்பட்டார். இவர், மஹா கும்பமேளாவில் தாக்குதல் நடத்த சதி செய்தது தெரியவந்தது.
உத்தர பிரதேசத்தில், யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள கவுசம்பியில் சர்வதேச பயங்கரவாதி பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, கூடுதல் டி.ஜி.பி., அமிதாப் தலைமையில் பயங்கரவாத தடுப்பு சிறப்பு படையினர் நேற்று தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, கோக்ராஜ் என்ற இடத்தில், 'பப்பர் கல்சா' இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதி லஜார் மாஷி கைதானார்.
அவரிடம் இருந்து கையெறி குண்டுகள், டெட்டனேட்டர்கள், வெளிநாட்டு துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து உத்தர பிரதேச போலீஸ் டி.ஜி.பி., பிரசாந்த் குமார் கூறியதாவது:
ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் ஸ்வர்ன் சிங் தலைமையில் செயல்படும், சர்வதேச பயங்கரவாத இயக்கமான 'பப்பர் கல்சா'வைச் சேர்ந்தவர் லஜார் மாஷி, ஸ்வர்ன் சிங்கின் நேரடி கட்டுப்பாட்டில் இருப்பவர்.
பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., பயங்கரவாதிகளுடனும் நெருங்கிய தொடர்பு வைத்திருந்து, பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருள், ஆயுதங்கள் போன்றவற்றை நம் நாட்டுக்குள் கடத்தி வந்தார்.
பிரயாக்ராஜில் நடந்த மஹா கும்பமேளாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தார். ஆனால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடு காரணமாக அவரது திட்டம் தோல்வியடைந்தது.
லஜார் மாஷியின் சொந்த ஊர், பஞ்சாபின் அமிர்தசரஸில் உள்ள குர்லியான் கிராமம். பஞ்சாபில் பயங்கரவாத குற்றத்துக்காக கைதான இவர், கடந்த ஆண்டு செப்டம்பரில் சிறையில் இருந்து தப்பிய நிலையில், தற்போது சிக்கியுள்ளார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.