ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்: 2 தொழிலாளர்கள் பலி
ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்: 2 தொழிலாளர்கள் பலி
ADDED : ஆக 01, 2026 08:12 PM
ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், சத்தீஸ்கரைச் சேர்ந்த இரண்டு புலம்பெயர் தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
தெற்கு காஷ்மீர் குல்காம் மாவட்டத்தின் கெல்லம் பகுதியில் உள்ள செங்கல் சூளைக்குள் அடையாளம் தெரியாத நபர்கள், நேற்று முன்தினம் மாலை ஆயுதங்களுடன் நுழைந்து வெளிமாநில நபர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.
இதில், அங்கு பணியாற்றி வந்த சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த தீபக் மற்றும் போபிந்தர் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். இதில், தீபக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு நபர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இறந்தவர்கள் இருவருக்கும் 20 வயதுக்குள் இருக்கும் என தெரியவந்துள்ளது.
இந்தத் தாக்குத;லுக்கு ஜம்மு – காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா, முதல்வர் ஒமர் அப்துல்லா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த சத்தீஸ்கரைச் சேர்ந்த இரண்டு தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையை ஜம்மு – காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது. சத்தீஸ்கர் அரசு சார்பில் தலா 20 லட்சம் ரூபாய் இழப்பீடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பயங்கரவாத அமைப்பான லஷ்கர் – இ – தொய்பாவின் துணை அமைப்பான, ‘தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட்’ இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. இதேபோல் கடந்த மாதம் 22ம்தேதி அனந்த்நாக் பகுதியில் போலீசார் ஒருவரை கொன்றதற்கும் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கும் இந்த அமைப்பே பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.
