ADDED : ஆக 12, 2024 03:59 AM

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தில் பலி எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், கோகர்நாக் பகுதியில் உள்ள அஹ்லான் ககர்மண்டு வனப்பகுதியில், பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து ராணுவத்தினர், போலீசார் மற்றும் சி.ஆர்.பி.எப்., படையினர் இணைந்து, அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
பாதுகாப்பு படையினரை பார்த்ததும், பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் அவர்களை நோக்கி சரமாரியாக சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பிலும் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இதில், ஆறு ராணுவ வீரர்கள், அப்பகுதியைச் சேர்ந்த இருவர் காயமடைந்தனர். அதில், இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர்; மற்ற ஐந்து பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று ஒருவர் இறந்தார். இதன் காரணமாக, பலி எண்ணிக்கை மூன்றாக அதிகரித்து உள்ளது.
இறந்தவர், கோகர்நாக் பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இதற்கிடையே, தலைமறைவாக உள்ள பயங்கரவாதிகளை தேடும் பணியை பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

