வருது வருது... தேர்தல் வருது!
நியாயம் பேசும் அலுவலக சங்கத்துக்கு ரெண்டு ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் நடத்த வேணுமாம். ஆனால் பதவிக்காலம் முடிந்து 11மாதம் தாண்டியும், தேர்தல் நடத்தலையாம். பல பேரின் துாண்டலில் ஜூலை 7ல் தேர்தல் நடத்த உகந்த நாளாக, நிச்சயம் செய்ய போறாங்களாம்.
இதுக்கு மத்தியில், தேர்தலில் போட்டியிட ஆயத்தமாக இருக்கிற 3-4 பேரை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்குவதா பேசிக்கிறாங்க. இதனால எதிர்ப்பு, தகராறு, மோதல் உருவாகும். இதை காரணம் காண்பித்து தேர்தலை நடத்தாமல், தள்ளி வைக்கலாமுன்னு காயை நகர்த்தி இருக்காங்களாம்.
யார், யார், எதற்காக நீக்கப்படுறாங்க. இதுக்கு ஒப்புதல் தருவது யாரு. ஒண்ணுமே புரியலன்னு ஓட்டுப் போட தகுதி உள்ளவங்க பேசுறாங்க.
'டோக்கன் அட்வான்ஸ்'
மாவட்ட மருத்துவமனை தலைமை பதவிக்கு, மாவட்டத்தில் உள்ள மருத்துவ அதிகாரி முயற்சி எடுத்துள்ளாராம். இப்போ இருக்கும் தலைமை பதவிக்காக, பல 'எல்' கை மாறியதாக பேச்சு. இதுபோல புதிய பதவிக்கு இதை விட அஞ்சு மடங்கு அதிகமாக பேசி, அதில ஒரு மடங்கு அட்வான்ஸ் தொகை, உரியவருக்கு போய் சேர்ந்தாச்சாம். விரைவில் இடமாற்றம் உறுதி.
கொரோனா முறைகேடு புகாரில் நடந்த 'கோல்மால்' குறித்து ஆதாரங்கள் சேகரித்து அரசுக்கு அனுப்ப போறாங்களாம்.
வருமா பஸ்?
பொன் விளைந்த நகரில் பெரும்பாலும் தமிழர்கள் தான் வசித்து வராங்க. தமிழக கேபிட்டல் சிட்டிக்கு, இங்கிருந்து க.அரசு நேரடி பஸ்கள் விடுறாங்க. ஆனால், அங்கிருந்து த.அரசின் பஸ்கள் வருவதில்லை. இது பற்றி, அங்கு ஆட்சியில் இருக்கும் கட்சியும், இருந்த கட்சியும் வாய் திறப்பதில்லை. வெளிமாநில தமிழருக்காக இது கூட செய்ய கூடாதா?