* எப்போ முடியும்?
குப்பம் --- மா.குப்பம் இணைப்பு ரயில் பாதை அமைக்க 13 கி.மீ., துாரம் தான் உள்ளது. இதுக்கு, 23 ஆண்டா காத்திருந்தும் இன்னும் முடிந்தபாடில்லை. ம.அரசு 200 'சி' நிதி கொடுத்தாங்களாம். இதில் சேர வேண்டியவங்களுக்கு கமிஷன் போய் சேர்ந்தாச்சு. ஆனாலும் வேலை முடியலையே.
முதல்ல, இரு மாநில நிலப் பிரச்னை காரணமுன்னு சொன்னாங்க. அந்த சிக்கலும் முடிஞ்சு போச்சாம். சின்ன சின்ன பாலங்கள் அமைக்கும் வேலை தான், பாக்கி இருக்குதாம்.
ஆயினும், ஒப்பந்தப்படி, 'முடிவே இல்லா ரயில் திட்டம்' இதுவாக தான் இருக்குது. ஒப்பந்ததாரரும் இடையில் ஓடிட்டதாகவும் சொன்னாங்க. 'பெவிகால்' ஒட்டியபடி இடைவெளி இல்லாமல், செங்கோட்டையில 28 வருஷமா இருந்த கைக்காரரு, ரயில்வே இணை மந்திரியாகவும் இருந்தும் பயனில்லையே.
பூக்காரர் வந்தார்... சென்றார். இப்போது புல்லுக்கட்டுக்காரர் நுழைந்திருக்கிறார். இவரது பதவிக்காலம் முடிவதற்குள்ளாவது நிறைவடையுமா.
-----
* காலங்கள் மாறும்!
பட்டியல் ஜாதிக்காரர்களின் நிதியை, வாக்குறுதிகளுக்கு பயன்படுத்தி கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துருக்குது. இதனால் அந்த சமுதாய கூட்டமைப்பை சேர்ந்தவங்க, கோலார் மாவட்டத்தில் இருக்கிற மூன்று ரிசர்வ் தொகுதி அசெம்பிளி காரர்களின் வீட்டின் முன் தர்ணா நடத்தினாங்க.
இந்த போராட்டம் பற்றி முன்கூட்டியே தெரிந்ததால், அந்த போராட்டத்திற்கு யாரும் முக்கியத்துவம் கொடுக்க கூடாதென சி.எம்., உத்தரவு போட்டாராம். அதனால, கோல்டு சிட்டி, ப.பேட்டை ஆளும் கட்சி உறுப்பினருங்க, பொழுது விடியும் முன் காணாம போயிட்டாங்களாம்.
அப்படியும் ப.பேட்டைக்காரர் டீ, காபி, டிபன் எல்லாம் ஏற்பாடு செய்து கொடுத்தாராம். ஆனா, கோல்டு சிட்டி மேடம், பச்சை தண்ணீர் கூட 'ஆபர்' செய்யலயாம். கால சக்கரம் ஒரே மாதிரி இருக்காது. வெயில், மழை, காற்று, குளிர், பனி என எல்லா காலமும் மாறி வரும் என்பதை மறக்கலாமா. பட்டியல் வகுப்பினர் பாடம் சொல்லும் காலம் வரப்போகுது என்கிறாங்க.
-----
* 'அம்மா' தண்டனை
ஆடித் திருவிழா கொண்டாட காக்கிகாரர்கள் அனுமதி வேணுமுன்னு உத்தரவு இருப்பதால், கோல்டு சிட்டியில் 50க்கும் மேற்பட்ட கோவில்காரர்களிடம் காக்கிகாரர்கள் பறிச்ச பணம் எக்கசக்கம்.
பெர்ர்ய ஆபீசர் கவனத்துக்கு வராமலேயே, வசூல் நடத்தினாங்களாம். வருஷத்துக்கு ஒருமுறை ஒவ்வொரு வீட்டிலும் வசூலிச்ச தொகையில் காக்கிக்கு ஒரு பங்கு கொடுக்கணுமாம். சாமி குற்றம் சும்மா விடுமான்னு தெரிந்தும் பணம் கறந்துட்டாங்க. 'அம்மா' தண்டனை தருவான்னு கோவில்காரங்க சபிக்கிறாங்க.
-----
* யார் மீது குற்றம்?
முனிசி,யின் தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு இல்லாமல் ஆக்கி, இட ஒதுக்கீடு செய்துள்ளதாக, கை கட்சியின் முக்கிய புள்ளிகள் அதிருப்தியில் இருக்காங்க.
இதனால், ரூலிங் பார்ட்டி கை காரர்களான கவுன்சிலர்களுக்கு, கொஞ்சம் கூட மரியாதை இல்லை; எங்கும் எதிலும் ஊழல் நடக்குது என்று 'பகீர் குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தி வராங்க.
முறைகேடு எங்கு நடக்குது; யாருக்கெல்லாம் பங்கு போகுது என்பதை சொல்ல மறந்து, ஆபீசர்களை மட்டுமே தாளிக்கிறாங்க. தைரியம் இருந்தா நகல் தலைவர் பற்றி சொல்ல வேண்டியது தானே.
***

