ADDED : ஜூன் 01, 2024 04:22 AM
வீணான பாதாள சாக்கடை
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், ரா.பேட்டையில் ஒவ்வொரு குறுக்கு சாலையிலும் பாதாள சாக்கடை அமைக்க 100 கோடி ரூபாயில் திட்டம் வகுக்கப்பட்டது. செப்டிக் டாங்குகளை அமைக்க, தெருவெல்லாம் பள்ளங்களை தோண்டினாங்க. ஆனால் வீடுகளின் கழிவுகள் செல்ல, இணைப்பு வழங்கப்படவில்லை.
தெரு, சாலைகளை நாசப்படுத்தியது தான் மிச்சம். இதற்கு செலவழித்த பெரிய தொகை வேஸ்ட்டானது. கோல்டு சிட்டி வளர்ச்சி பணிகளுக்கு சென்ட்ரல், ஸ்டேட்கள் பல வளர்ச்சி திட்டம் அறிவித்து, நிதி வழங்கினாலும் நகரை மேம்படுத்தல. அதிகார 'தலை'கள் மட்டுமே வளமாகுது. பல கோடி ரூபாய் பணத்தை வீணாக்கியவரை என்ன செய்வாங்க.
முடங்கிய விளையாட்டு துறை
சர்வதேச அளவில் விளையாட்டுக்கு பெருமையை தேடி தந்த வீரர்கள் இருந்த இடம் கோல்டு சிட்டி. ஆனா, மாநில அரசின் விளையாட்டு துறை பல ஆண்டுகளாகவே செயல் இழந்து கிடக்குது. சிறுவர்கள், இளைஞர்களை ஊக்கப்படுத்த எந்த திட்டமும் இல்ல. அழிந்து வரும் விளையாட்டு மைதானங்களை கவனிப்பாரும் இல்லை.
ஒரு காலத்தில் மத்திய, மாநில அரசு நிறுவனங்களில் வாய்ப்புகள் கிடைத்த போது, பெரும்பாலான விளையாட்டு வீரர்கள், கோல்டு சிட்டியை சேர்ந்தவர்களா இருந்தாங்க. அத்தகைய கோல்டு சிட்டியை விளையாட்டு துறை கண்டுக்காமல் கை விட்டதற்கு காரணம் என்ன?
மறந்த மண்ணின் மைந்தர்கள்
தங்கமான நகரில் சிட்டி பஸ் இயக்கப்படுவதே இல்லை. ஆண்டர்சன்பேட்டை, ராஜர்ஸ்கேம்ப், மாரிகுப்பம், சாம்பியன், பாலக்காடு, டோல்கேட், பெமல் நகர் ஆகியவைகளுக்கு பஸ் வசதியே இல்லை.
இங்கெல்லாம், 10 ஆண்டுகளுக்கு முன், 'லோக்கல் பஸ்' இயக்கினாங்க. அதை யார் சொல்லி நிறுத்தினாங்களோ. இதை எல்லாம் கேட்காத 'மண்ணின் மைந்தர்கள்' தேர்தல் நேரத்தில் மட்டும் முகவரியை காட்டலாமா. நகரின் பல பிரச்னைகளை, ஏறெடுத்து பார்க்காதவங்களும், திடீர் வெளியூர்காரர்களும் ஒரே ரகமாக இருக்காங்களே.
தாமதம் வேண்டாம்!
பெரிய தேர்தல் முடிவுக்கு பிறகு ரா.பேட்டை கீதா சாலையில் அரசு கோவிலின் ராஜ கோபுரம் கட்டுவதற்கு நிதி தயாராக இருக்குதாம். ஓரிரு ஆண்டுக்குள் கட்டி முடிக்க போறாங்களாம். இருந்தாலும் டெண்டர் இன்னும் கோரவில்லை. அதிகாரத்தில் உள்ளவங்க, கோவில் திருப்பணியை திறமையானவர்களுக்கு வழங்க வேண்டும். இது தலைமுறை தலைமுறையாக தலை நிமிர வைக்கும்.
உரிகம் ரயில்வே மேம்பாலம் போல, குப்பம் -- மாரி குப்பம் ரயில்வே திட்டம் போல இழுத்தடிக்காமல் செய்து முடிப்பாங்களான்னு பக்தர்களின் கேள்வியா இருக்குது.

