காசு, பணம், துட்டு, மணி!
கோல்டன் முனிசி.,யில் இருக்கும் 35 பேரில் கை டிக்கெட் பெற்று ஜெயிச்சவங்க 14. இவங்கள விட ஒண்ணு ஜாஸ்தியா தான் சுயேச்சைகள் ஜெயிச்சாங்க. ஆனாலும், சுயேச்சைகள் எல்லாம் ஒண்ணு கூடி தலைவர் ஆகலாம்னு சொல்லுற மன உறுதி யாருக்கும் இருக்குறதா தெரியல. ஏன்னா, இவங்கல்ல 10 பேர் கை நிழலில் இருக்காங்களாம்.
பூ கட்சியில் மூன்று பேர் இருந்தாலும், இவர்கள் ஓட்டுப் போட வேண்டுமானால் வருவாங்களே தவிர பதவிகளுக்கு போட்டி போட்டு ஜெயிக்க சாத்தியமே இல்லை. நீலக் கொடியில் இரண்டு ஜெயிச்சி, அதில் ஒண்ணு கை பக்கம் போயாச்சு.
மீதியுள்ள ஒண்ணு கூட தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு போட்டியிட வாய்ப்பே இல்லை. ஏன்னா இட ஒதுக்கீடு இவங்கள ஓரம் கட்டிவிட்டது.
புல்லுக்கட்டு, செங்கொடிக்கும் கூட இதேநிலை தான்.
அதனால் தான் கை பக்கமே, 'சவுண்டு' ஓவராக கேட்குது. முனிசி.,யை பொறுத்த வரையில், வெற்றி, தோல்விகளை இப்பவும் காசு, பணம், துட்டுதான் நிர்ணயிக்கும்.
ஆப்பரேஷன் தடுமாற்றம்!
அரசு மருத்துவமனையின் பெரிய டாக்டர் ஒருத்தர் பதவி உயர்வும், இடமாற்றமும் பெற மந்திரிக்கு, 50 'எல்' கொடுத்தாராம். ஆனால், லோக்கல் அசெம்பிளிக்காரர் கவனத்திற்கு இந்த சமாச்சாரம் போகாமல் உள்ளுக்குள் பேசி முடித்துக் கொண்டதால், அசெம்பிளிக்காரர் விழித்துக் கொண்டார்.
பெரிய டாக்டரை இருக்கும் இடம் விட்டுத் தாவ விடாமல், 'செக்' வைத்து விட்டார்.
ஏற்கனவே, பல பிரிவுகளுக்கு டாக்டர்கள் பற்றாக்குறை இருக்குது. அதனால், பெரிய டாக்டரை இடமாற்றம் செய்ய விடாமல் தடுத்துட்டாராம். மந்திரிக்கு சென்ற தொகையை போல தனக்கும் தரணும்னு சொல்லாமல் புரிய வெச்சிட்டாராம்.
டாக்டரின், 'டிரான்ஸ்பர் ஆப்பரேஷன்' சக்சஸ் ஆக வேண்டும் என்பதால் நோயாளிகளுக்கு செய்யும் உடல்ரீதியான ஆப்பரேஷனுக்கு ரேட் ஓவரா ஆக்கிட்டாராம். ஒரே மாசத்தில் அந்த தொகையை பறிக்கும் உள்வேலைகள் நடந்து வருகிறதாம்.
மருத்துவமனையில் ஆப்பரேஷன் ரேட் பற்றி பலருக்கும் தெரிந்தும் கூட, அரசின் ஊழல் ஒழிப்பு துறைக்கு மட்டும் கண்ணும் காதும் இல்லாமல் இருப்பதாகவே ஜனங்க பேசிக்கிறாங்க.
கொலையுதிர் காதல்!
காலையில் தான் டும் டும்... மாலையில் உயிர் பிரிய வீடெங்கும் குபீர் ரத்த அபிஷேகம். அது எப்படிங்க நடந்தது? இதென்ன மாயாஜால மர்ம கதை. தனி அறையில் இருந்த புதுமண தம்பதிக்குள் அப்படியென்ன யுத்தம் ஏற்பட்டது?
ஆறு மாதம் இனித்த இவர்களின் காதல், ஜெயித்து 10 மணி நேரத்தில், காதலில் என்ன கொடூர சாதல் வேண்டி கிடந்தது. இந்த 'கொலைக்களம்' பலருக்கு பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது.
இந்த இருவருக்கு அடுத்து, மூன்றாவது நபர் யாரோ ஊடுருவி, கொலை விளையாட்டை நடத்தினார்களா என்ற சந்தேகம் தான் சீரியசாக பல இடங்களில் பேசப்படுகிறது.
காக்கிகளுக்கு சிறு க்ளூ கூடவா கிடைக்காமல் போனது. இரு தரப்பு உறவுகளை, அந்த கிராமத்தினரை துருவினாலே, எல்லா ரகசியமும் இறந்திருக்கலாம்.
யாரையோ காப்பாற்ற கொலையை மூடி மறைக்கிறார்களா. இது என்றாவது ஒருநாள் வெளிச்சத்திற்கு வரத்தான் போகிறது.
எப்போது திறப்பு?
தேசத்தின் பெரிய தேர்தல் நெருங்கிய நேரத்தில், பல லட்சம் செலவு செய்து, 'பெமல் நகர்' ரயில் நிலைய புதிய டிக்கெட் கவுன்டர தொறந்து வைச்சாங்க.
எல்லா புகழும் அப்போதைய, 'செங்கோட்டை முனி'க்கு வந்து சேரவே ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதை திறந்து இன்னும் ஒரு ஆண்டு முழுசாக முடியவில்லை. அதற்குள் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து கிடக்கிறது. இது தான் புதிய கட்டடத்தின் தரம்.
உரிகம் ரயில் நிலைய அலுவலக டிக்கெட் கவுன்டரையும் பல லட்சம் செலவில் நவீன முறையில் கட்டி முடிச்சிருக்காங்க.
இதைத் திறந்து வைக்க இன்னும் நல்ல நாளை ரயில்வே துறை தேடிக் கொண்டிருக்கிறது. இந்த கட்டடத்தின் தரமும் எப்படி இருக்குமோ?

