ADDED : செப் 14, 2024 08:23 AM
தனியாரிடம் மருத்துவமனை?
பொன் விளைந்த நகரத்தில், 50 சதவீதம் வாழ்விடம் உள்ள இடத்துக்கு மருத்துவ வசதி வழங்கி வந்த கம்பெனி மருத்துவமனையை மூடி, 20 ஆண்டை கடந்து போனது. இதை மறுபடியும் திறந்து மருத்துவ வசதியை செய்து தர அரசு முன் வரல. பொறுப்பான மக்கள் பிரதிநிதிகளும் நடவடிக்கை எடுக்கல.
கொரோனா நேரத்தில், சிகிச்சை மையமாக திறந்தாங்க. இதை பயன்படுத்தி, நல்லா சாப்பிட்டாங்களாம். இதன் கணக்கு வழக்கு வெளியே வராமல் மூடி மறைச்சிட்டதா சொல்றாங்க. தனியார் மருத்துவ கல்விக்காரங்க, காலியாக உள்ள இந்த கட்டடங்களை பெறுவதற்கு முயற்சித்தாங்க.
ஆனால், அவங்களுக்கு கிடைக்காமல் போனது. தற்போது, இலவச மருத்துவமனை நடத்த வெளியூரின் தனியார் நிறுவனம் முன் வந்திருக்காங்க. இதுக்கு சிபாரிசா புதிய செங்கோட்டைக்காரர் தலையிட்டிருக்காரு.
நேரில் வந்தும் பார்த்தாரு. இவரது முயற்சி வெற்றி பெறுமா. இலவச மருத்துவம் பேரில் உள்ளுக்குள் எத்தனை தில்லு முல்லு உள்ளதோ?
தேர்தல் நேர கண்துடைப்பா?
மைனிங் தொழிலாளர்களின் குடும்பம் குடியிருக்கும் வீடுகளுக்கு வீட்டுரிமை பட்டா என்ற பொசிஷன் சர்ட்டிபிகேட் வழங்கினாங்க. அதில் 1,000க்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு இன்னும் வழங்காமல் இருக்காங்க.
வழங்கப்பட்ட சர்ட்டிபிகேட்டில் பி.எம்., படமும், அப்போதைய மைனிங் அமைச்சர் படத்தையும், பிரின்ட் செய்து கொடுத்தாங்க. பி.எம்., மாறல. ஆனால் மைனிங் அமைச்சரு மாறியிருக்காரு. நிலுவையில் உள்ள சர்ட்டிபிகேட்டில் புதிய அமைச்சருடைய படத்தை அச்சடித்து தருவாங்களா அல்லது பழைய அமைச்சர் படத்தை தருவாங்களா.
பொசிஷன் சர்ட்டிபிகேட் காட்டி, முனிசி.,யில் பட்டா பதிவு செய்யலாமுன்னு சொன்னாங்க. இதுக்கு சான்சே இல்லைன்னு 'கை' விரிக்கிறாங்களே. பொசிஷன் சர்ட்டிபிகேட் என்பது தேர்தல் நேர கண் துடைப்பா என ஜனங்க கேட்கிறாங்க.
புஸ்வாணமா... அதிர்வேட்டா?
கோல்டன் சிட்டியில் குப்பைகள் கொட்டும் பிரச்னைக்கு மாவட்ட பொறுப்பு அமைச்சரோ, கோலார் மாவட்டத்தில் இருக்கிற, கைக்கார அசெம்பிளிக்காரர்களோ வாயைத் தொறக்கலயே.
புல்லுக்கட்டு எம்.பி.,யோ, 29ம் தேதி மாவட்ட வளர்ச்சி பணிகள் கூட்டம் நடக்கும்போது பொறுப்பு அமைச்சர், மாவட்ட கலெக்டர், மற்ற அசெம்பிளிகாரர்கள் முன்பு, இப்பிரச்னையை எடுத்து எதிர்ப்பேன்னு உறுதி அளித்திருக்காரு.
குப்பைகள் கொட்ட விடாமல், இதுக்கொரு முடிவை கட்டுவேன்னு ஒத்தையா நின்று சவால் விடுறாரு. அவரோட கட்சியின் ரெண்டு அசெம்பிளி காரர், ஒரு மேல்சபைகாரரும் சேர்ந்து கைகோர்த்து நிக்கபோறதாவும் தெரியுது. ஆனால், ஆளும் கட்சிக்காரங்க என்ன செய்யப் போறாங்களோ. வெடிக்குமா... புஸ்வாணமா என அன்னைக்கு தெரிய போகுது.
மாயமான சிமென்ட் சாலைகள்
முனிசி., நுழைவாயிலில் 'மாஜி' தலைவர் படம் தான், இப்பவும் இருக்குது. இதனை மாற்றுவாங்களா அல்லது இருந்துட்டு போகட்டுமேன்னு விட்டுடுவாங்களா.
முனிசி.,யின் தலைவர் மேடம் எம்.ஜி.மார்க்கெட்டின் மீன், மட்டன் கடைகளை பார்க்க வரணும். அவராவது சிதைந்து காணாமல் போயிருக்கும் சிமென்ட் சாலையை கண்டுப் பிடிக்க வேண்டும்.
முனிசி.,க்கு வருமானம் தரும் மார்க்கெட் பகுதிகளை சீரமைக்க, மறந்து போனவர் பட்டியலில் இவரும் சேருவாரா அல்லது நான் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதில் வேற மாதிரின்னு ஆக் ஷனில் காட்டுவாரா?