முன்னாள் அமைச்சர் ரேணுகாச்சார்யா மீது தாவணகெரே பா.ஜ., தலைவர்கள் குற்றச்சாட்டு
முன்னாள் அமைச்சர் ரேணுகாச்சார்யா மீது தாவணகெரே பா.ஜ., தலைவர்கள் குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 21, 2024 07:07 AM
தாவணகெரே: 'தாவணகெரே லோக்சபா தொகுதியில் பா.ஜ., வேட்பாளர் காயத்ரி சித்தேஸ்வர் தோற்றுப் போனதற்கு, முன்னாள் அமைச்சர் ரேணுகாச்சார்யா காரணம்' என, தாவணகெரே மாவட்ட பா.ஜ., முன்னாள் தலைவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
லோக்சபா தேர்தலில் தாவணகெரே தொகுதியில் முன்னாள் அமைச்சர் ரேணுகாச்சார்யா பா.ஜ., சீட் எதிர்பார்த்தார். ஆனால் அவருக்கு கிடைக்கவில்லை.
முன்னாள் எம்.பி., சித்தேஸ்வர் மனைவி காயத்ரிக்கு சீட்கிடைத்தது.
இதனால் கோபம் அடைந்த ரேணுகாச்சார்யா, 'காயத்ரிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய மாட்டேன்' என வெளிப்படையாக கூறினார். முன்னாள் முதல்வர் எடியூரப்பா சமாதானம் செய்தார்.
இதனால் காயத்ரிக்கு ஆதரவாக, பெயரளவுக்கு மட்டும் ரேணுகாச்சார்யா பிரசாரம் செய்தார். தேர்தலில் காயத்ரி தோற்றுப் போனார்.
இந்நிலையில் தாவணகெரே மாவட்ட முன்னாள் பா.ஜ., தலைவர்கள் யஷ்வந்த் ராவ், வீரேஷ் நேற்று கூட்டாக அளித்த பேட்டி:
முன்னாள் அமைச்சர் ரேணுகாச்சார்யா, கட்சிக்காக நேர்மையாக வேலை செய்திருந்தால், லோக்சபா தேர்தலில் தாவணகெரே தொகுதியில் பா.ஜ., வெற்றி பெற்றிருக்கலாம்.
காயத்ரி தோல்வி அடைந்ததற்கு, ரேணுகாச்சார்யா தான் நேரடி காரணம். காயத்ரிக்காக உண்மையாக பிரசாரம் செய்தேன் என, தர்மஸ்தலா மஞ்சுநாதா கோவிலில் அவர் சத்தியம் செய்ய வேண்டும்.
சட்டசபை தேர்தலில் தோற்ற பின்னர், காங்கிரசில் இணைய முயற்சி செய்தார். அமைச்சர் மல்லிகார்ஜுன் மனைவி பிரபாவுக்கு ஆதரவாக செயல்பட்டார். அவர் ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதி. கட்சி தலைவர்கள் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.