ஜம்மு காஷ்மீரின் கள நிலவரத்தை புறக்கணிக்க முடியாது: மாநில அந்தஸ்து கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து
ஜம்மு காஷ்மீரின் கள நிலவரத்தை புறக்கணிக்க முடியாது: மாநில அந்தஸ்து கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து
ADDED : ஆக 14, 2025 03:26 PM

புதுடில்லி: ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை வழங்கும் நேரத்தில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு நிலவும் கள நிலவரத்தை புறக்கணிக்க முடியாது,'' என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் எனக்கூறி சுப்ரீம் கோர்ட்டில் கல்வியாளர் ஜாகூர் அஹமது மற்றும் சமூக ஆர்வலர் குர்ஷியாத் அஹமது மாலிக் வழக்கு தொடர்ந்தனர்.
அவர்கள் தங்களது மனுவில், '' மாநில அந்தஸ்து வழங்குவதை தாமதம் செய்தால், மாநில அரசுக்கு பின்னடைவு ஏற்படும். கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. மாநிலத்தில் அமைதியான முறையில் சட்டசபை தேர்தல் நடந்தது. எனவே மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவதற்கு பாதுகாப்பு சவால்கள், வன்முறை அல்லது வேறு எந்த இடையூறும் இல்லை. முன்பு சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி மாநில அந்தஸ்தை வழங்க வேண்டும்'', எனத் தெரிவித்து இருந்தனர்.
இந்த மனு தலைமை நீதிபதி கவாய் மற்றும் நீதிபதி வினோத் சந்திரன் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, '' மாநில அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், மாநிலத்தில் விசித்திரமான சூழ்நிலை நிலவுகிறது,'' என்றார்.
இதனைத் தொடர்ந்து தலைமை நீதிபதி, ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு நிலவும் கள நிலவரத்தையும், பாதுகாப்பு சூழ்நிலைகளையும் புறக்கணிக்க முடியாது எனத் தெரிவித்ததுடன், இந்த மனு குறித்து எட்டு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

