ADDED : பிப் 14, 2025 11:14 PM
சிவில் லைன்ஸ்:“மண்டலங்களைப் போல மாநகராட்சியின் பிற பகுதிகள் சுத்தமாகவும் அழகாகவும் மாறும் நாள் விரைவில் வரும்,” என, துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா தெரிவித்தார்.
துப்புரவுப் பணியாளர்களுடன் உரையாடல் நிகழ்ச்சிக்கு நேற்று என்.டி.எம்.சி., எனும் புதுடில்லி மாநகராட்சி ஏற்பாடு செய்திருந்தது. மாநகராட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றி துப்புரவுப் பணியாளர்களை துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா கவுரவித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
டில்லிவாசிகள் மாற்றத்திற்கான ஒரு புதிய தலைமையைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த மாற்றம் நகரம் மற்றும் அதன் மக்களை விரைவில் நல்ல முறையில் பாதிக்கும். மண்டலங்களைப்போல மாநகராட்சியின் பிற பகுதிகளும் சுத்தமாகவும் அழகாகவும் மாறுவதை மாநகராட்சி விரைவில் உறுதி செய்யும்.
பிற பகுதிகளில் சிறப்பான முன்னேற்றம் தேவை. நகரை பராமரிக்கும் பணியில் 50 ஆயிரம் துப்புரவுப் பணியாளர்களின் பங்கு முக்கியமானது.
கொரோனா தொற்று, யமுனை வெள்ளம், ஜி20 மாநாடு உள்ளிட்ட பல்வேறு காலகட்டங்களில் துப்புரவுப் பணியாளர்களின் பணி பாராட்டத்தக்கது.
நகரை அழகுப்படுத்தும் துப்புரவுப்படுத்தும் செயலில் பொதுமக்களும் பங்கேற்க வேண்டும். தலைநகரில் பள்ளங்களையும் குப்பையையும் பார்க்கும்போது, நாட்டின் தலைநகரின் அங்கமாக நாம் இருக்கிறோமா என்ற கவலை எழுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
மேயர் மகேஷ்குமார், துணை மேயர் ரவீந்தர் பரத்வாஜ், ஆணையர் அஸ்வனிகுமார் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.