முதல்வர் நகர் வலம் பாதியில் நிறுத்தம் 20க்குள் சாலை பள்ளங்களை மூட உத்தரவு
முதல்வர் நகர் வலம் பாதியில் நிறுத்தம் 20க்குள் சாலை பள்ளங்களை மூட உத்தரவு
ADDED : செப் 13, 2024 08:04 AM

பெங்களூரு: பெயரளவுக்கு பெங்களூரு நகர்வலம் மேற்கொண்ட முதல்வர் சித்தராமையா, பாதியிலேயே நிறுத்தி, பஸ்சில் இருந்து இறங்கி, மெட்ரோ ரயிலில் விதான் சவுதாவுக்கு சென்றார். ''வரும் 20ம் தேதிக்குள் நகரில் உள்ள அனைத்து பள்ளங்களும் மூடப்படும்,'' என்று அவர் தெரிவித்தார்.
பெங்களூரு சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை, 15 நாட்களுக்குள் மூடும்படி, துணை முதல்வர் சிவகுமார், மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, அனைத்து மண்டலங்களிலும் அவசர அவசரமாக சாலை பள்ளங்கள் மூடும் பணிகள் நடக்கின்றன.
பஸ்சில் புறப்பாடு
இந்நிலையில், முதல்வர் சித்தராமையா நேற்று மதியம் திடீரென பெங்களூரு நகர் வலம் மேற்கொண்டார். விதான் சவுதாவில் இருந்து, வால்வோ சொகுசு ஏசி பஸ்சில் புறப்பட்டார். பஸ்சின் எல்.இ.டி., திரையில், முதல்வர் நகர்வலம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அமைச்சர்கள் ராமலிங்கரெட்டி, ஜார்ஜ், பைரதி சுரேஷ், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ரிஸ்வான் அர்ஷத், கிருஷ்ணப்பா, ஹாரிஸ், மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார்கிரிநாத், பி.டி.ஏ., கமிஷனர் ஜெயராம், பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர் உட்பட உயர் அதிகாரிகளும் முதல்வருடன் சென்றனர்.
மெட்ரோ ரயில்
விதான் சவுதாவில் இருந்து புறப்பட்டு, நேராக ஹெப்பால் அருகில் உள்ள பி.டி.ஏ., மேம்பால பணிகள்; வெளி வட்ட சாலையின் கரியண்ணா பாளையாவின் சர்வீஸ் சாலையில் நடந்து வரும் தார் போடும் பணிகள்; ஹென்னுார் சந்திப்பு அருகில் நடந்து வரும் தார் போடும் பணிகள்; கே.ஆர்.புரம் ரயில் நிலையம் அருகில் நடந்து வரும் மெட்ரோ ரயில் பணிகள் குறித்து முதல்வர் ஆய்வு மேற்கொண்டார்.
இங்கிருந்து, பழைய மெட்ராஸ் சாலை வழியாக, இந்திரா நகரில் நடந்த சாலை பள்ளங்கள் மூடும் பணிகளை, முதல்வர் ஆய்வு செய்வதாக, அவரது ஆய்வு பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், இங்கு செல்லாமல், கே.ஆர்.புரம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கி, மெட்ரோ ரயிலில் ஏறி, விதான் சவுதாவுக்கு சென்றார். அவருடன் சில பயணியர் படம் எடுத்து கொண்டனர்.
பின், முதல்வர் சித்தராமையா கூறியதாவது:
பெங்களூரு சாலைகளில், பெஸ்காம், குடிநீர் வடிகால் வாரியம், மின்துறை, ஓ.எப்.சி., என பல துறையினர் கேபிள்களை மண்ணில் பதிக்க, சாலையை தோண்டி உள்ளனர். இதனால், பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.
ரூ.15 லட்சம்
இந்த சாலை பள்ளங்கள் மூடுவதற்கு, ஒவ்வொரு வார்டுக்கும், 15 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தற்போது சாலை பள்ளங்கள் மூடும் பணிகள் நடந்து வருகின்றன. வரும் 20ம் தேதிக்குள், நகரில் உள்ள அனைத்து பள்ளங்களையும் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.