வால்மீகி ஆணைய முறைகேடு புகார் சமூக நலத்துறைக்கு அனுப்பிய தேர்தல் கமிஷன்
வால்மீகி ஆணைய முறைகேடு புகார் சமூக நலத்துறைக்கு அனுப்பிய தேர்தல் கமிஷன்
ADDED : ஜூலை 17, 2024 11:23 PM
பல்லாரி: வால்மீகி மேம்பாட்டு ஆணைய பணத்தை, பல்லாரி லோக்சபா தேர்தலுக்கு பயன்படுத்தியது குறித்து, தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கப்பட்ட புகார், சமூக நலத்துறைக்கு அனுப்பப்பட்டது.
கர்நாடக வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்துள்ள முறைகேடு சூறாவளியை உருவாக்கியுள்ளது. சட்டசபை, மேலவையில் அமளி, துமளிக்கு காரணமாகியுள்ளது.
வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தின் பணம், லோக்சபா தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல்லாரி லோக்சபா தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றிக்காக 20 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவிட்டிருப்பது, அமலாக்கத்துறை விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்தது.
இது தொடர்பாக, பல்லாரி லோக்சபா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட அருண் ஹிரேஹாள், மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஆனால் இந்த புகாரை விசாரிப்பதற்கு பதிலாக, சமூக நலத்துறைக்கு தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது. இது சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது.
இது தொடர்பாக, அருண் ஹிரேஹாள் கூறியதாவது:
கர்நாடகாவில் தேர்தல் விதிகள், அமலில் இருந்த போதே வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தின், 84 கோடி ரூபாய் தவறாக பயன்படுத்தப்பட்டது. இந்த பணம் தேர்தலுக்கு பயன்படுத்தியிருக்கலாம். ஆணைய அதிகாரி ஒருவர், தற்கொலை செய்து கொண்டார்.
முறைகேட்டில் முன்னாள் அமைச்சர் நாகேந்திராவின் பெயர் அடிபடுகிறது. இது குறித்து, விசாரணை நடத்தும்படி வலியுறுத்தி, தார்வாட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் மாநில தேர்தல் ஆணையத்துக்கும், புகார் அளித்திருந்தேன். என் புகார், சமூக நலத்துறைக்கு மாற்றப்பட்டது.
தேர்தல் ஆணையம் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக உள்ளது. லோக்சபா தேர்தலில், காங்., சார்பில் போட்டியிட்டு, வெற்றி பெற்ற துக்காராமை காப்பாற்ற, முயற்சி நடக்கிறது. இவருக்கு ஆதரவாக நாகேந்திரா தேர்தலில் பணியாற்றினார்.
வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தின் பணம், பல்லாரி, ராய்ச்சூர் தொகுதிகளின் தேர்தலில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டு தொகுதிகளின் காங்., எம்.பி.,க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என, உச்ச நீதிமன்றத்துக்கு இ - மெயில் மூலமாக, வேண்டுகோள் விடுத்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.