ADDED : செப் 08, 2024 12:40 AM

ஜபல்பூர்:மத்திய பிரதேசத்தின் இந்துாரில் இருந்து ஜபல்பூர் நகருக்கு தினமும் மாலை ஜபல்பூர் அதிவிரைவு ரயில் இயக்கப்படுகிறது. நேற்று காலை 5:38க்கு ஜபல்பூர் ரயில் நிலையத்தின் ஆறாவது நடைமேடைக்கு வந்து கொண்டிருந்த இந்த ரயில், திடீரென தடம்புரண்டது.
இதில், இன்ஜின் மற்றும் அதை தொடர்ந்து உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி, பொது பெட்டிகள் தடம் புரண்டன.
இது குறித்து அறிந்த ஜபல்பூர் ரயில் நிலைய அதிகாரிகள், ஊழியர்கள் விரைந்து வந்து அப்பெட்டிகளில் இருந்தவர்களை வெளியேற்றினர்.
இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
பயணியர் வெளியேறுவதற்காக அந்த வழியில் அரை மணி நேரத்திற்கு ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
விபத்து பற்றி ஜபல்பூர் ரயில்வே கோட்ட மேலாளர் மதுர் வெர்மா கூறுகையில், “ரயில் எப்படி தடம் புரண்டது என விசாரிக்க விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது,” என்றார்.