முதல்வரை மாற்ற முடியும்: பொம்மை கூறும் 'பிளாஷ் பேக்'
முதல்வரை மாற்ற முடியும்: பொம்மை கூறும் 'பிளாஷ் பேக்'
ADDED : செப் 03, 2024 10:57 PM

கதக் : ''மெஜாரிட்டி இருந்தாலும் எம்.எல்.ஏ.,க்கள் நினைத்தால் முதல்வரை மாற்ற முடியும் என்பதற்கு கர்நாடகாவில் பல உதாரணங்கள் நிகழ்ந்து உள்ளன,'' என ஹாவேரி பா.ஜ., - எம்.பி., பசவராஜ் பொம்மை புள்ளி விபரங்களுடன் தெரிவித்தார்.
கதக் மாவட்டம், பெடகேரியில் உள்ள நீலகண்டேஸ்வரா மடத்துக்கு, ஹாவேரி பா.ஜ., - எம்.பி., பசவராஜ் பொம்மை நேற்று சென்றார். அம்மடாதிபதி நீலகண்ட பட்டதார்யா மஹாசுவாமிகளை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றார்.
பின், அவர் கூறியதாவது:
அனைத்தும் சரியாக உள்ளது என்று கூறி கொண்டே, தோணியில் ஓட்டை போடுவது தான் அரசியல். கர்நாடக வரலாற்றை பார்க்கும் போது, காங்கிரசில் வீரேந்திர ஹெக்டே போன்ற, பலம் வாய்ந்த தலைவர் முதல்வராக இருந்துள்ளார்.
அவரது ஆட்சி காலத்தில், இரவோடு, இரவாக அனைத்து எம்.எல்.ஏ.,க்களும், குண்டுராவுக்கு ஆதரவு தெரிவித்து, முதல்வராக்கினர். தேவராஜ் அர்ஸ், 2வது முறையாக சொந்த பலத்தின் அடிப்படையில் முதல்வரானவர்.
பங்காரப்பாவுக்கு 183 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இருந்தும், அவரை முதல்வர் பதவியில் இருந்து மாற்றினர். இப்படி அரசியலில் மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கும். இப்போதும் அதே சூழ்நிலை கர்நாடகாவில் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டாக காங்கிரஸ் ஆட்சியில் எந்த விதமான வளர்ச்சி பணிகளும் நடக்கவில்லை. மக்கள் மிகுந்த கவலையில் உள்ளனர். காங்கிரசில் நடக்கின்ற உட்கட்சி பூசலால், முதல்வரின் நாற்காலி ஆட்டம் காணும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
முதல்வர் நாற்காலியில் அமருவதற்கு சிலர் விரும்புகின்றனர். காங்கிரசில் சூழ்நிலை சரியில்லை என்பதை, மூத்த தலைவர்களின் பேச்சு மூலம் புரிந்து கொள்ளலாம். மூடா முறைகேட்டில் முதல்வர் சித்தராமையா, சிறை செல்வாரா என்று நான் சொல்ல முடியாது. சட்டம் தன் கடமையை செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.