தேவகவுடாவை இழிவாக பேசிய 'மாஜி' எம்.பி., வீட்டில் முட்டை வீச்சு
தேவகவுடாவை இழிவாக பேசிய 'மாஜி' எம்.பி., வீட்டில் முட்டை வீச்சு
ADDED : மே 21, 2024 06:28 AM

பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடா பற்றி இழிவாக பேசியதாக கூறி, முன்னாள் எம்.பி., சிவராமே கவுடா வீட்டின் மீது மர்ம நபர்கள் முட்டை வீசிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாண்டியா மாவட்டம், நாகமங்களா சட்டசபை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ.,வாக இரண்டு முறை பதவி வகித்தவர் சிவராமே கவுடா. பின், காங்கிரசில் இணைந்து பல பதவிகளை வகித்தார். 2018ல் சீட் கிடைக்காததால், ம.ஜ.த.,வில் இணைந்தார்.
அப்போது, மாண்டியா லோக்சபா தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். பின், கருத்து வேறுபாடு காரணமாக பா.ஜ.,வில் இணைந்தார். அதன்பின், மீண்டும் காங்கிரசில் இணைந்தார்.
தற்போது, பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ வெளியானதில், சிவராமே கவுடாவின் பங்கு உள்ளதாக கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.
இவர், பா.ஜ., பிரமுகர் தேவராஜே கவுடாவுடன் பேசிய ஆடியோ வெளியாகி பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அதுவும், முன்னாள் பிரதமர் தேவகவுடா பற்றி இழிவாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் ம.ஜ.த., தொண்டர்கள், அவர் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.
பெங்களுரு சென்னம்மனகெரே அச்சுக்கட்டு பகுதியில் உள்ள சிவராமே கவுடாவின் வீட்டின் மீது நேற்று முன்தினம் இரவு, காரில் வந்த சிலர் முட்டைகளை வீசினர். போலீசார் பாதுகாப்புக்கு இருந்தும், இச்சம்பவம் நடந்துள்ளது. கண்காணிப்பு கேமராக்களை பார்த்து, குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
முட்டை வீச்சு சம்பவத்தை அடுத்து, சிவராமே கவுடா வீடு அமைந்துள்ள சாலையின் இரண்டு பக்கமும், போலீசார் தடுப்புகள் அமைத்து, பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

