மரங்கள் வெட்டப்பட்ட விவகாரம் பா.ஜ.,வுக்கு ஆம் ஆத்மி கேள்வி
மரங்கள் வெட்டப்பட்ட விவகாரம் பா.ஜ.,வுக்கு ஆம் ஆத்மி கேள்வி
ADDED : ஜூலை 05, 2024 01:42 AM
ரோஸ் அவென்யூ:ரிட்ஜ் பகுதியில் மரம் வெட்டப்பட்ட விவகாரத்தில் பா.ஜ.,வின் மவுனம் குறித்து ஆம் ஆத்மி கேள்வி எழுப்பியுள்ளது.
சாலை அமைப்பதற்காக, ரிட்ஜ் பகுதியில் 1,100 மரங்கள் வெட்டப்பட்ட விவகாரம் பூதாகரமாகி வருகிறது. உரிய அனுமதியின்றி டி.டி.ஏ., எனும் டில்லி மேம்பாட்டு ஆணையம் மரங்களை வெட்டியதாக புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நகரின் பசுமையை மேம்படுத்துவதற்கான விரிவான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்குமாறு டில்லி அரசுக்கும், உள்ளாட்சி நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தெற்கு ரிட்ஜ் பகுதியில் மரங்கள் வெட்டப்பட்ட விவகாரம்குறித்து விசாரணை நடத்த அமைச்சர்கள் ஆதிஷி, சவுரப் பரத்வாஜ், இம்ரான் ஹுசைன் ஆகியோர் அடங்கிய உண்மை கண்டறியும் குழுவை டில்லி அரசு ஜூன் 29-ம் தேதி அமைத்தது.
இதன் விசாரணைக்கு ஆஜராகும்படி, டி.டி.ஏ., மற்றும் மாநில வனத்துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் விசாரணைக்கு எந்த அதிகாரியும் ஆஜராகவில்லை.
டில்லி அரசின் உண்மையைக் கண்டறியும் குழு அமைத்திருப்பது விதிகளை மீறுவதாகவும், உச்ச நீதிமன்ற அவமதிப்புக்கு வழிவகுக்கும் என்றும் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறையின் முதன்மைச் செயலர் கருத்துத் தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் குறித்து, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் ஜாஸ்மின் ஷா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ரிட்ஜ் பகுதியில் சட்டவிரோதமாக மரங்களை வெட்டப்பட்ட விவகாரம் வெளியானதில் இருந்து மாநில பா.ஜ.,வும் துணைநிலை கவர்னரும் மவுனம் காத்து வருகின்றனர்.
மாசு பிரச்னையில் முதலில் அரசியல் செய்து, முதலைக் கண்ணீர் வடிப்பது பா.ஜ., தான். மாசு பிரச்னையில் டில்லி அரசின் பல பணிகளை மத்திய அரசும் துணைநிலை கவர்னரும் முடக்கி வைத்துள்ளனர். ஏன் மவுனம் காக்கிறார்கள்?
டில்லியின் மாசுபாடு குறித்த அக்கட்சியின் நிலைப்பாடு வெறும் அரசியல்.
இவ்வாறு அவர் கூறினார்.