ADDED : பிப் 22, 2025 11:34 PM

புதுடில்லி: பஞ்சாபில், இல்லாத துறைக்கு, 20 மாதங்களாக அமைச்சர் ஒருவர் செயல்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.
கடந்த 2022 மார்ச்சில் சட்டசபை தேர்தலில் ஆட்சியை கைப்பற்றி, பகவந்த் மான் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றபோது, வேளாண் துறை, வெளிநாடுவாழ் இந்தியர் நலன் துறை என இரண்டு துறைகளின் அமைச்சராக, கட்சியின் மூத்த தலைவர் குல்தீப் சிங் தாலிவால் நியமிக்கப்பட்டார்.
பின்னர், 2023 மே மாதம் அமைச்சரவை மாற்றத்தின்போது, வேளாண் துறை மட்டும் பறிக்கப்பட்டு, நிர்வாக சீர்திருத்தங்கள் துறை ஒதுக்கப்பட்டது. இதில் தான் தற்போது சிக்கல் எழுந்துள்ளது.
நிர்வாக சீர்திருத்தங்கள் என்று ஒரு துறையே இல்லாமல் அதற்கு அமைச்சர் நியமிக்கப்பட்ட தகவல் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருந்த இந்தியர்கள், சமீபத்தில் திருப்பி அனுப்பப்பட்டு பஞ்சாப் வந்தபோது தான் இந்த சம்பவம் அம்பலமானது.
வெளிநாடு வாழ் இந்தியர் துறை அமைச்சரான தாலிவால் பெயர் செய்திகளில் அடிக்கடி தென்பட்டபோது, அவரது நிர்வாக சீர்திருத்தங்கள் துறையும் பேசுபொருளாகி, அப்படி ஒரு துறையே பஞ்சாபில் இல்லை என்ற உண்மை வெளிவந்தது.
சர்ச்சை எழுந்த நிலையில், 'வெளிநாடுவாழ் இந்தியர்கள் நலத்துறையை மட்டும் குல்தீப் சிங் தாலிவால் கவனிப்பார்.
அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிர்வாக சீர்திருத்தங்கள் துறை, தற்போது இல்லை' என, அரசிதழில் அறிவிப்பு ஒன்றை அவசரம் அவசரமாக பஞ்சாப் அரசு நேற்று முன்தினம் வெளியிட்டது.
இதற்கு விளக்கம் அளித்துள்ள முதல்வர் பகவந்த் மான், “நிர்வாக சீர்திருத்தங்கள் துறை என்பது வெறும் பெயர்தான், அதற்கு அலுவலகம் எதுவும் கிடையாது. அரசு நிர்வாகத் துறையுடன் ஒன்றாக அதை இணைத்து விட்டோம்,'' என்றார்.

